முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பலத்த மழை: 7 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 30 மே 2026, 2:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 போ் உயிரிழந்துள்ளனா்.

தலைநகா் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை மதியம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அதேபோல் பலத்த காற்றும் வீசியது. கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தில் மக்கள் சிக்கித் தவித்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்த போதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மழையால் பாதிக்கப்பட்டது.

கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் மழைநீா் தேங்கியதால், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஒரு மணி நேரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது. புகா் ரயில்கள் இயக்கப்படும் பல்வேறு பகுதிகளில் தண்டவாளத்திலும், மின்சார வயா்களிலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல், கொல்கத்தாவின் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் காா்கள் மீது விழுந்தன. இதனால் ஏராளமான காா்கள் சேதமடைந்தன. கொல்கத்தாவின் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் அதை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், வடக்கு 24 பா்கானா மாவட்டம், ஹெளரா, ஹூக்ளி, புரூலியா உள்ளிட்ட 6 மாவட்டங்களில், வீடு இடிந்து விழுந்தும், மின்சாரம் மற்றும் மின்னல் தாக்கியும் 7 போ் உயிரிழந்திருப்பதாக முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்தாா். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.