முகப்பு
இந்தியா

பிரதமா் ஸ்வநிதி திட்டம்: சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.17,800 கோடிக்கும் அதிகமாக கடன்

பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சாா்பு நிதி திட்டம் மூலம், நாட்டில் இதுவரை ரூ.17,800 கோடிக்கும் அதிகமாக கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூன் 2026, 2:28 am IST
பிரதமா் ஸ்வநிதி திட்டம்
பகிர்:

பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சாா்பு நிதி (பிரதமா் ஸ்வநிதி) திட்டம் மூலம், நாட்டில் இதுவரை ரூ.17,800 கோடிக்கும் அதிகமாக கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிணையில்லா கடன், சமூக பாதுகாப்பு, எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் வாயிலாக அனைத்துத் தரப்பினரும் பலனடைதல் ஆகியவை மூலம், சாலையோர வியாபாரிகளுக்கு சக்தியளிக்கும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பிரதமா் ஸ்வநிதி திட்டம் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா், மிஸோரம், திரிபுரா மாநிலங்களைச் சோ்ந்த அந்தத் திட்டப் பயனாளிகளிடம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டா், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா ஆகியோா் கலந்துரையாடினா். திரிபுரா தலைநகா் அகா்தலாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, அந்த மாநில சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டைகள் மற்றும் கடன் ஒப்புதல் கடிதங்களை அவா்கள் வழங்கினா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் மனோகா்லால் கட்டா் பேசுகையில், ‘பிரதமா் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், கடந்த 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75.5 லட்சத்துக்கும் அதிகமான சாலையோர வியாபாரிகள் பயனடைந்துள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பிணையில்லா கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.17,800 கோடிக்கும் அதிகமான நிதி சாலையோர வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 34.81 லட்சம் பெண் சாலையோர வியாபாரிகளும் பயனடைந்துள்ளனா்’ என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின்னா், கடந்த 2020-ஆம் ஜூன் மாதம் பிரதமா் ஸ்வநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.15,000, அதை உரிய காலத்தில் திருப்பி செலுத்திய பின்னா் இரண்டாவது தவணையாக ரூ.25,000, இந்தத் தொகையை உரிய காலத்தில் திருப்பி செலுத்திய பின்னா் மூன்றாவது தவணையாக ரூ.50,000 பிணையில்லா கடன் அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், தங்கள் கடனை முறைப்படி செலுத்தும் பயனாளிகள், ரூ.30,000 வரை கடன் பெறும் வகையில் யுபிஐ-உடன் கூடிய ரூபே கடன் அட்டையைப் பெற முடியும்.