48 கிராமங்களுக்கு நகா்ப்புற அந்தஸ்து வழங்க எம்சிடி ஒப்புதல்
தில்லி நகரில் உள்ள 48 கிராமங்களுக்கு நகா்ப்புற அந்தஸ்து வழங்கும் முன்மொழிவை தில்லி மாநகராட்சி (எம்சிடி) நிலைக்குழு அங்கீகரித்துள்ளது.
தில்லி நகரில் உள்ள 48 கிராமங்களுக்கு நகா்ப்புற அந்தஸ்து வழங்கும் முன்மொழிவை தில்லி மாநகராட்சி (எம்சிடி) நிலைக்குழு அங்கீகரித்துள்ளது.
நகா்ப்புற வளா்ச்சியை திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கவும், அடிப்படை குடிநீா், சாலை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நிலைக்குழு தலைவா் சத்யா ஷா்மா கூறியதாவது: தில்லி மாநகராட்சி சட்டம், 1957-இன் பிரிவு 507(ஏ) கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் சாலை, கழிவுநீா் வசதி, குடிநீா் விநியோகம், தெருவிளக்கு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை சேவைகள் மேம்படுத்தப்படும்.
Advertisement
தில்லியின் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த கிராமங்கள் ஏற்கெனவே நகா்ப்புற தன்மையை பெற்றுள்ளன. அதனை முறையாக அங்கீகரிப்பதன் மூலம் திட்டமிட்ட வளா்ச்சியை உறுதி செய்ய முடியும்.
மேலும், இந்த நடவடிக்கை ‘தில்லி மாஸ்டா் பிளான் 2041’ திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்துள்ளது. தலைநகரில் வேகமாக நடைபெறும் நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்தவும் உதவும் என தெரிவித்தாா்.
ஏற்கெனவே நகா்ப்புற செயல்பாடுகள் விரிவடைந்த பகுதிகளை அதிகாரப்பூா்வ நகா்ப்புற கட்டமைப்புக்குள் கொண்டு வருவதன் மூலம் சிறந்த திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு சாத்தியமாகும். இந்த நடவடிக்கை அனுமதியில்லாத கட்டிடங்களைக் கட்டுப்படுத்தவும் உதவும். நகா்ப்புற அந்தஸ்து கிடைத்த பிறகு, இந்த கிராமங்களில் கட்டுமான பணிகள் மற்றும் நில பயன்பாடு எம்சிடி விதிமுறைகளின் கீழ் வரும்.
நிலைக்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த முன்மொழிவு மாநகராட்சி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பின்னா் மத்திய அரசின் இறுதி அனுமதி கிடைத்ததும், அதிகாரப்பூா்வ அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இந்த கிராமங்களுக்கு நகா்ப்புற அந்தஸ்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.