முகப்பு
கண்ணோட்டம்

சுவாமிஜி - வீ.சுப்பிரமணிய ஐயருடன்

சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜி ஒருநாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக நேரம் போக்குவதற்காக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக் காண வந்தனர்.

Updated On : 11 ஜூன் 2013, 4:27 pm IST
பகிர்:

சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜி ஒருநாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக நேரம் போக்குவதற்காக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக் காண வந்தனர். அவர்கள் வந்தபோது சுவாமிஜி ஹுக்கா பிடித்துக் கொண்டிருந்தார். பாதி விழித்தும் பாதி கனவிலும் மிதப்பது போல் இருந்தார் அவர். இளைஞர்கள் சிறிது நேரம் காத்திருந்தனர். அவர்களுள் ஒருவர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி கடவுள் என்றால் என்ன?' என்று கேட்டார்.

சுவாமிஜி அந்தக் கேள்வியைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. கேள்வியையே பொருட்படுத்தாதவர்போல் அமர்ந்திருந்த அவர் திடீரென்று தலையைத் தூக்கி, 'நல்லது, நண்பனே! ஆற்றல் என்றார் என்ன? சற்று விளக்கேன் பார்க்கலாம்' என்றார். இளைஞர்கள் இதனைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடியே திகைத்து நின்றனர். உடனே சுவாமிஜி, 'என்னப்பா இது! ஆற்றலின்றி தினசரி வாழ்க்கை இல்லை. அத்தகைய ஒன்றையே உங்களால் விளக்க முடியவில்லை. நான் கடவுளைப்பற்றி விளக்க வேண்டும் என்று கேட்கிறீர்களே!' என்றார். அந்த இளைஞர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் அதுபோன்று எதிர்க் கேள்விகளையே பதில்களாக அளித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். ஒருவர் மட்டும் அவர்களுடன் செல்லாமல் சுவாமிஜிக்காகக் காத்திருந்தார். அவர் சுப்பிரமணிய ஐயர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர் தினமும் அவரிடம் வர ஆரம்பித்தார்.

சுவாமிஜியும் சீடர்களும் தினமும் மெரினா கடற்கரையில் நடப்பது வழக்கம். ஒருநாள் சுவாமிஜி ஐயரிடம், 'நல்லது தம்பி, உனக்கு மல்யுத்தம் தெரியுமா?' என்று கேட்டார். 'தெரியும்' என்று ஐயர் கூறியதும், 'அப்படியானால் வா, மோதிப் பார்ப்போம்' என்றார் சுவாமிஜி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமிஜியை ஐயர் பைல்வான் சுவாமி' என்றே அழைப்பார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.