மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம் நாளை (ஜூன் 19) நிறைவேற்றப்படவுள்ளதைப் பற்றி...
கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு மிகத்தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநில அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமீபத்தில் மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.
இதன் மீது விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மந்திரி சி.ஆர். பட்டேலிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் உபரி நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Advertisement
Advertisement
இதற்கிடையில், பெங்களூரில் செய்தியாளர்கள் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், மேக்கேதாட்டு திட்டம் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும்தான்” என்றும் மேக்கேதாட்டுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று அவர் கூறி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நடந்த தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையில் மேக்கேதாட்டுத் திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எதிர்த்து நாளை (ஜூன் 19) தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார்.
தமிழக அரசின் அனுமதியின்றி மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ கூடாது என வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. காவிரி ஆற்றுப் படுகையில் எந்த இடத்திலும் புதிய நீர்தேக்க திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும் தனித்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு நாளை சட்டப்பேரவையில் கொண்டு வரும் தனித்தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.