மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது பற்றி...
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் பங்கை கேட்கும் முழு உரிமையும் தமிழகத்திற்கு உள்ளது. காவிரி நீர் பிரச்னை ஏற்கெனவே நீண்டகாலமாக தொடர்ந்து வரும் முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், மேக்கேதாட்டு அணை திட்டம் தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை உறுதிப்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், தமிழக முதல்வர் உடனடியாக கர்நாடக அரசுடனும், மத்திய அரசுடனும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டை வடிகாலாக பயன்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையேயான மிகப்பெரிய பிரச்னையாக பூதாகரமாக வெடிக்கும் அபாயம் உருவாகும் நிலை உள்ளது. அந்த சூழ்நிலையை தவிர்க்க மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
”கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; யாருக்குக் கொடுத்தான்? ஒரு மாநிலத்திற்கா கொடுத்தான்? இல்லை, தமிழகத்திற்கும் கொடுத்தான். தண்ணீர் என்பது இயற்கை அது பொது சொத்து அனைவருக்கும் சமமானது. அந்தத் தண்ணீரைக் கேட்கவும் பயன்படுத்தவும் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் முழு உரிமை உள்ளது. எனவே, மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Premalatha Vijayakant, General Secretary and MLA of the DMDK, stated on Sunday that the Mekedatu dam construction project must be abandoned.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.