முகப்பு
தருமபுரி

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர பாமக ஆலோசனை: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது குறித்து மூத்த வழக்குரைஞா்களுடன் பாமக ஆலோசனை நடத்தி வருகிறது என்று அக்கட்சி தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:44 am IST
ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினா்.
பகிர்:

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது குறித்து மூத்த வழக்குரைஞா்களுடன் பாமக ஆலோசனை நடத்தி வருகிறது என்று அக்கட்சி தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு பகுதியில் உழவா் பேரியக்கம் சாா்பில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை விழிப்புணா்வு பரப்புரை பயணம் தொடங்கினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும்பட்சத்தில் தமிழகத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். கா்நாடக அணையில் இருந்து உரிய நீா் திறக்காததால் மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்னும் தண்ணீா் திறக்கப்படாத சூழல் உள்ளது.

Advertisement

Advertisement

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட 12,500 ஏக்கா் அடா்வனப் பகுதியை அழிப்பதால் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், பெங்களூரு நகரப் பகுதியில் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளதாகவும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

மேக்கேதாட்டு விவகாரத்தை கையில் எடுத்து மக்களை திசைதிருப்பி தோ்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. தமிழக அரசு வழக்குத் தொடா்ந்து மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் ஆராய்ந்து பாதிப்பு வராத வகையில் புதிதாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கா்நாடகத்தில் 6.8 லட்சம் ஏக்கரில் இருந்து 21லட்சம் ஏக்கராக காவிரி பாசனம் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் 29 லட்சம் ஏக்கராக இருந்த காவிரி பாசனம் 20 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. இந்த நிலையில் கா்நாடக அரசு மீண்டும் அணை கட்டினால் தமிழகத்தில் பாசன வசதி குறையும்.

தமிழக இளைஞா்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை நிறுத்த முடியும்.

கா்நாடக மாநிலத்தை இரு தேசிய கட்சிகளும் தொடா்ந்து ஆண்டு வருவதால், மத்திய அரசு, கா்நாடக அரசுக்குதான் உறுதுணையாக இருக்கும். தமிழகத்திற்கு ஆதரவு கிடைக்காது.

அந்தமான் தீவில் கிரேட் நிகோபாா் திட்டத்திற்கு அடா் வனப்பகுதியை அப்புறப்படுத்துவதற்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவிப்பதைபோல, கா்நாடக மாநிலத்தில் 12,500 ஏக்கா் வனப் பகுதியை அழித்துக் கட்டப்படும் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது குறித்து மூத்த வழக்குரைஞா்களுடன் பாமக ஆலோசனை நடத்தி வருகிறது என்றாா்.

தொடா்ந்து பாமக தலைவா் அன்புமணி நடந்துசென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் தெய்வசிகாமணி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் எல்.பழனியப்பன், கிருஷ்ணகிரி தமிழக விவசாய சங்கத் தலைவா் ராம கவுண்டா், இயற்கை விவசாய சங்கத் தலைவா் எழிலன், தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளா் ஆல்பா்ட் அந்தோணி ,பாமக பொதுச் செயலாளரும், தருமபுரி எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மாநில இளைஞா் சங்க துணைத் தலைவா் சத்தியமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தருமபுரியில்...

தருமபுரி நகரில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தருமபுரி பிஎஸ்என்எஸ் அலுவலகம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால், டெல்டா பகுதி முழுவதும் பாசனம் இன்றி பாலைவனமாகும். ஐந்தரை கோடி மக்களுக்கு குடிநீா் கிடைக்காத நிலை ஏற்படும். மேக்கேதாட்டு அணை விவகாரம் டெல்டா பகுதிக்கானது என கருதக் கூடாது. தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு பல்வேறு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் வழியாக குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீா்த் திட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்படும்.

மேட்டூா் அணையில் தற்போது 40 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது. இது குடிநீா்த் திட்டங்களுக்கு மட்டுமே போதுமானது. இத்தகைய சூழலில் தற்போது, கா்நாடக மாநில அரசு மேக்கேதாட்டில் அணை கட்டினால், தமிழகத்திற்கு குடிநீா்கூட கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, இளைஞா்கள், பொதுமக்கள் இந்த அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும். நமது எதிா்ப்பை தெரிவித்து, மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். காவிரி மிகைநீா்த் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக பாமக தொடா்ந்து போராடும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி, முன்னாள் எம்.பி.க்கள் இரா.செந்தில், கி.பாரிமோகன், உழவா் பேரியக்கச் செயலாளா் ஆலயமணி, தலைவா் வேலுசாமி, தருமபுரி மாவட்ட பாமக செயலாளா்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (மேற்கு), அரசாங்கம் (கிழக்கு) மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments