மேக்கேதாட்டு அணை தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டது ஏன்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்
மேக்கேதாட்டு அணை தொடர்பான தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்..
மேகேதாட்டு அணை விவகாரத்தில், சட்ட வல்லுநர்கள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் உரை மீதான 2 ஆவது நாள் விவாதம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அரசின் தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
Advertisement
Advertisement
அப்போது "நதிநீர் தாவா சட்டம் 1956 -ன் படி, மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னை தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானத்தில் சேர்க்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்தார். முதல்வர் விஜய்யும் அதனை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
இந்நிலையில் மேக்கேதாட்டு அணை தொடர்பான அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'புதிய நடுவர் மன்றம்' என்பதால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தீர்மானத்தில் திருத்தம் செய்தால் அதனை முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,
"சட்ட வல்லுநர்கள் கூறியபடியே புதிய நடுவர் நீதிமன்றம் என்ற கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தனது உத்தியை மாற்றியுள்ளது. திட்ட அறிக்கை கொடுக்கச் சொல்லி கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்தால் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை அமைய வழிவகுத்து விடும்.
காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். கர்நாடகம் தனது உத்தியை மாற்றியுள்ளது. அதனால் நாமும் சட்ட வல்லுநர்களின் அறிவுறுத்தலின்படி புதிய நடுவர் மன்றம் அமைக்க தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் இருக்கிறது. அணை கட்டும் பணி என்பதால் புதிய ஆணையம் தேவை" என்று பேசினார்.
முன்னதாக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்தும் இதுபற்றி பேசினார்.
இறுதியாக நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை அமைச்சர் பேசியபின் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து யாரும் பேச அனுமதியில்லை என்று பேரவைத் தலைவர் கூறினார்.
Mekedatu Dam: Amendment made as advised by legal experts; Aadav Arjuna clarification
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.