FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெகவில் இணைந்தது ஏன்? சி. மகேந்திரன் விளக்கம்

தவெகவில் இணைந்ததன் காரணம் குறித்து சி. மகேந்திரன் கூறியது பற்றி...

Updated On : 18 ஜூன் 2026, 8:26 pm IST
சி. மகேந்திரன் - படம்: தினமணி
பகிர்:

தன்னுடைய கொள்கைகளை தீவிரமாக செயலாற்றுவதற்காகவே தவெக கட்சியில் இணைந்ததாக சி. மகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சி. மகேந்திரன் பேசியதாவது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பணியாற்றினேன். எந்த அரசுப் பணிக்கும் செல்லாமல் கட்சியில் பணியாற்றினேன்.

கடந்த 3 ஆண்டுகளாக கட்சியினுள் பல்வேறு நிலைமைகளால் என்னால் கட்சியில் சரிவர செயல்பட முடியவில்லை. இருப்பினும், கட்சியில் தொடர்ந்து மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற தனிப்பட்ட இயக்கங்களில் ஆர்வம்காட்டி வந்தேன்.

Advertisement

Advertisement

ஆனால், இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒரு முக்கியமான மாற்றமாக நான் கருதுகிறேன். இந்தியாவிலேயே பணமில்லாமல், சட்டப்பேரவைக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் செல்ல முடியும், நானும் லஞ்சம் வாங்க மாட்டேன் போன்ற கொள்கைகளை முன்வைத்த தமிழம முதல்வர் விஜய்யின் செயல்பாடு ஓர் உடன்பாடாகவும் இருக்கிற காரணத்தால், என்னுடைய கம்யூனிஸ்ட் அரசியலை தவெகவுடன் இணைந்து, ஏழை எளிய மக்களுக்காக ஊழலற்ற போராட்டத்தில் ஈடுபடக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய வாழ்நாளை இதற்காக அர்ப்பணிப்பதற்காக முடிவு செய்துள்ளேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் இருந்துள்ளேன். தோழர் நல்லகண்ணு 12 ஆண்டுகளாக செயலாளராக இருந்தபோது, நான் துணைச் செயலாளராக இருந்தேன். ஆனால், கடந்த காலங்களில் என்னுடைய பல பொறுப்புகளிலிருந்து நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன். அதனை இப்போது பேச விரும்பவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விடுபட்டு, வெறும் கட்சி உறுப்பினராக மட்டுமே இருந்தேன். இப்போது கட்சி உறுப்பினர் நிலையிலிருந்தும் விடுபட்டு, தவெகவில் இணைந்துள்ளேன்.

இங்கும் ஒரு கம்யூனிஸ்டாக இருந்துதான் நான் செயல்படப் போகிறேன். என்னுடைய கொள்கைகள், லட்சியங்களுக்கு தவெக முரண்பாடாக இருப்பதாகத் தெரியவில்லை.

தவெகவுக்கு ஊழலை ஒழிக்க வேண்டும், மதுவை அகற்ற வேண்டும், வேறுபாட்டை அகற்ற வேண்டும் என்கிற உயரிய கொள்கைகள் உண்டு. அவற்றுடன் இணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளேன். என்னுடைய பழைய அரசியலுக்கும் இன்றைக்கும் பெரிய முரண்பாடில்லை.

எந்த ஆதாயத்துக்காகவும் நான் கட்சி மாறவில்லை. என்னுடைய கொள்கையை விரிந்த அளவில் தீவிரமாக செய்ய முடியும் என்பதற்காகவே இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான என். ஆனந்த் முன்னிலையில் சி. மகேந்திரன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். மேலும், சிவப்பு துண்டுடன் தவெகவில் தொடர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் சி. மகேந்திரன் தெரிவித்தார்.

summary

Why did C. Mahendran join TVK?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments