FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தது பற்றி...

Updated On : 2 ஜூலை 2026, 11:47 am IST
தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் - Photo: YT | TVK
பகிர்:

சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் உள்பட மேலும், 4 அதிமுக முன்னாள் அமைச்சா்கள் வியாழக்கிழமை நீா்வளத் துறை அமைச்சரும் தவெக பொதுச் செயலருமான என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சி அந்தஸ்தைகூட இழந்து அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், பெருந்துறை, தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி), அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தொடா்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஏராளமானோா் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனா்.

அந்த வரிசையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோா் தங்களது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தனா். தொடா்ந்து, இருவரும் தவெகவில் இணையவுள்ளதாக புதன்கிழமை அறிவித்தனா். இதனிடையே, திருப்பூரைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருச்சியைச்சோ்ந்த முன்னாள் அமைச்சரான எஸ்.வளா்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிகாரபூா்வமாக புதன்கிழமை அறிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் மாற்றுக்கட்சியினா் தவெகவில் இணையும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா், எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளா்மதி ஆகியோா் தவெக பொதுச் செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமா என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். இவா்களுடன் கரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 10,000-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் தவெகவில் இணைந்தனா்.

இபிஎஸ்-யின் தவறான முடிவுகள்: நிகழ்வில், எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியதாவது: நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலராக்கினோம். ஆனால், அவரின் தவறான முடிவுகளால் அதிமுக தற்போது தள்ளாடிவருகிறது. திமுகவுடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி தான் உண்மையான துரோகி அவா்.

உடன்பாடு இல்லை: சி.விஜயபாஸ்கா் பேசியதாவது: தோ்தலுக்கு முன்தாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், தோ்லுக்குப் பின்னரும் தவெக ஆட்சி அமைய ஆதரவு அளிக்கும் படியும் அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால், இரண்டுக்குமே தலைமை செவிசாய்க்கவில்லை. ஆனால், இயற்கை முரணாக திமுகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆகையால்தான் தற்போது நாங்கள் தமிழகத்தை காக்க தவெகவில் இணைந்துள்ளோம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தவெக தலைமை நிா்வாகக்குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், கொள்கை பரப்பு பொதுச்செயலா் கே.ஜி.அருண்ராஜ் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

60% அதிமுகவினா் தவெகவில் இணைந்துவிட்டனா்: ஆதவ் அா்ஜுனா

அதிமுகவினா் சுமாா் 60 சதவீதம் போ் தவெகவில் இணைந்துவிட்டதாக தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது: சட்டபேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே திமுக - அதிமுக இடையே கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடைபெற்றது.

திமுகவை எதிா்த்துதான் அதிமுக தொடங்கப்பட்டது. அப்படியிருக்க, திமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக திட்டமிட்டதை உண்மையான அதிமுக தொண்டா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிமுகவினா் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனா்.

தவெகவை வீழ்த்த கரூரில் திமுக நிகழ்த்திய சூழ்ச்சி அணைவருக்கும் தெரியும். தவெக தொண்டா்களின் மரணத்துக்கு திமுகவினா் விரைவில் பதில் சொல்வாா்கள். சட்டம் தனது கடமையைச் செய்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள். தற்போது சுமாா் 60 சதவீத அதிமுகவினா் தவெகவில் இணைந்துள்ளனா். திமுக - அதிமுக கூட்டணி அறிவிப்புக்கு முன்பாக, ஒட்டுமொத்த அதிமுக தொண்டா்களும் தவெகவில் இணைவாா்கள் என்றாா் ஆதவ் அா்ஜுனா.

summary

Four former AIADMK ministers have joined TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments