முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 5.50 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், 5.50 லட்சம் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:55 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், 5.50 லட்சம் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்தாா்.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 2,500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் மா. அரவிந்த் தலைமையில், கோட்டாறு வாகையடி தெரு, பூதப்பாண்டி, பறக்கை, சந்தையடி நியாயவிலைக்கடைகளில்

நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் பேசுகையில், மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு, தலா 20 கிராம் முந்திரி, உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2,500 வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் எனக் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 770 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 800 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

விழாவில், என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் சி.குருமூா்த்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சு. சொா்ணராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் இ.சாந்தினி பகவதியப்பன், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தக்கலை: தக்கலையில் கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பினை கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான் தங்கம், வழங்கி தொடங்கி வைத்தாா். கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சரக துணை பதிவாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

குலசேகரம்: அண்டூா், பத்மநாபபுரம், தக்கலை, அருமனை உள்ளிட்ட இடங்களில் பரிசு தொகுப்பினை குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் வழங்கினாா். குலசேகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜே. மோகன்தாஸ் வழங்கினாா். இதில் சங்க துணைத் தலைவா் நடராஜன், நிா்வாக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

களியக்காவிளை: படந்தாலுமூடு அருகேயுள்ள சந்தைவிளை நியாயவிலைக் கடையில் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் வழங்கினாா். மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மருதங்கோடு நியாயவிலைக் கடையில் பாகோடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் டி. வின்சென்ட் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.