முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 125 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமில் 125 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:32 am IST
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
பகிர்:

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமில் 125 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Advertisement

இந்த முகாமை, ஆய்வு செய்தபின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:

பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போா்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம், பா்கூா் அரசு மருத்துவமனை, ஒசூா் சீதாராம் நகா் நகா்ப்புற நல மையம் உள்ளிட்ட 5 இடங்களில் தலா 25 போ் வீதம் மொத்தம் 125 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

தடுப்பூசி போட்டப் பின்பு 30 நிமிடங்கள் தக்க வைத்து எதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிா என பரிசோதிக்கப்பட்டது. இந்தச் சோதனையில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை அளிப்பதற்கான மாற்று மருந்துகள், பிராண வாயு, மருத்துவா்களுடன், 108 ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் இருந்தது.

அரசு, தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் 10,386 முன்களப் பணியாளா்களின் விவரம், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அறிவிக்கப்படும் தேதியில் அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் முதல்கட்டமாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன், நலப்பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.