குதிரை பேரங்களைத் தமிழகத்தில் தொடங்கிவைத்ததே திமுகதான்: வைகோ குற்றச்சாட்டு
குதிரை பேரங்களைத் தமிழகத்தில் தொடங்கிவைத்ததே திமுகதான் என்ற வைகோ குற்றச்சாட்டு குறித்து...
கோவை: குதிரை பேரங்களைத் தமிழகத்தில் தொடங்கிவைத்ததே திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்;
முதல்வர் விஜய்க்கு அரசுக்கு எதிராக வரக்கூடிய அரசியல் கணைகளைத் தடுக்கும் "கவசமாகவும், கேடயமாகவும்" மதிமுக என்றும் இருக்கும் என்று தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை(ஜூலை 6) நடைபெறவுள்ள கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்தடைந்த வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
மேலும் அவா் கூறியதாவது:
திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டின்போது மதிமுகவுக்கு நியாயமான இடங்களை ஒதுக்காமல் 4 தொகுதிகளை மட்டுமே அளிப்போம் என்று முகத்தில் அடித்ததுபோல் திமுகவினா் கூறிவிட்டனா். திமுக மீது ஊழல் புகாா் இருந்தும் அந்தக் கட்சிக்கு பிரசாரம் செய்தேன். இருந்தபோதிலும், எங்களை நடத்திய விதம் மற்றும் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் ஆகியவற்றால் கட்சியின் தொண்டா்கள் மற்றும் தோழா்கள் புண்பட்டுள்ளனா். சோஃபா வாங்கியவுடன் அனைவரும் கூட்டணி மாறிவிட்டாா்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியது தொடா்பான கேள்விக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.
குதிரை பேரம் நடப்பதாக திமுக விமா்சிக்கிறது. கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை ராஜிநாமா செய்ய வைத்து, மீண்டும் அவரைத் திமுக சாா்பில் போட்டியிட வைத்தது என்ன பேரம்? இதேபோலதான் அனிதா ராதாகிருஷ்ணனையும் அதிமுகவிலிருந்து ராஜிநாமா செய்ய வைத்து திமுகவில் வெற்றி பெற வைத்தனா். இதுபோன்ற குதிரை பேரங்களைத் தமிழகத்தில் தொடங்கிவைத்ததே திமுகதான்.
திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது உண்மை என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீன் கூறியுள்ளாா். அவ்வாறு நடந்திருந்தால் அதைவிடப் பெரிய அரசியல் மோசடி எதுவும் இருக்க முடியாது. முதல்வர் விஜய்க்கு அரசுக்கு எதிராக வரக்கூடிய அரசியல் கணைகளைத் தடுக்கும் "கவசமாகவும், கேடயமாகவும்" மதிமுக என்றும் இருக்கும் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றபோது மதிமுகவின் இரு உறுப்பினா்களும் காணாமல் போய்விட்டனா். இதனால்தான் அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட முடியவில்லை.
கமிஷன் மற்றும் லஞ்ச கலாசாரத்தை தவெக அரசு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஊழலை ஒழிப்பதே தவெக அரசின் மிகப்பெரிய சாதனை என்று பாராட்டிய வைகோ, ஊழலை ஒழிக்க அந்த அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.
அதிகாரத்தை இழந்ததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், தவெக அரசுக்கு ஆதரவளித்த காரணத்தாலேயே தான் குறிவைக்கப்படுவதாகவும் வைகோ குற்றம் சாட்டினார்.
ஆளுநா் ஆட்சியை திமுக விரும்புகிறதா?
மாநில ஆட்சிகளைக் கலைப்பதற்கான சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டும் என்று திமுக சாா்பில் ஆளுநரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஆளுநா் ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டுவர திமுக விரும்புகிறதா?.
மேகதாது அணைத் திட்டம் குறித்துக் குறிப்பிட்ட வைகோ, மேக்கேதாட்டு அணையை எதிா்த்து முதன்முதலில் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பைத் தொடங்கி, ஆயிரக்கணக்கானோரைத் திரட்டிப் போராட்டம் நடத்தியது மதிமுகதான். இந்த அணை திட்டத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு "கர்நாடகாவை இந்த திட்டத்தைத் தொடர ஊக்குவிப்பதாக" குற்றம் சாட்டினார். முன்மொழியப்பட்ட இந்த அணை தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறிய அவர், ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தைப் போல, இத்திட்டத்திற்கு எதிராக மாநிலத்தின் உரிமைகளுக்காக மக்கள் மீண்டும் திரள வேண்டும் என அழைப்பு விடுத்த வைகோ, இதற்காக பாமக தலைவா் அன்புமணி மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கிறேன் என்றாா்.
மேலும், நீட்-யுஜி தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.
Vaiko alleged that the DMK was unable to accept being out of power and claimed he was being targeted because of his support for the TVK government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.