திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்! செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்!
செங்கல்பட்டில் கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பற்றி...
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலம் ஊழல் நடைபெற்றதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் நடைபெற்ற மதிமுக கட்சி நிகழ்ச்சியில் இன்று காலை வைகோ கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “திமுக ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர். திமுக ஆட்சியில் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு கமிஷன் எனக் கணக்கிட்டு லஞ்சம் பெற்றார்கள். கமிஷன், கட்டிங், கரப்ஷன் என இருந்தது. முதல்வர் விஜய் வந்தவுடன் அதையெல்லாம் ஒழித்துவிட்டார்.” எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும், தவெகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவும், இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளும் விஜய்தான் முதல்வர் என்றார்.
இதனிடையே, கமிஷன், கட்டிங், கரப்ஷன் செய்த திமுக கூட்டணியில் இருந்தது ஏன்? அப்போது ஏன் பேசவில்லை? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த வைகோ, “கூட்டணியில் இருந்தபோது திமுகவைப் பற்றி பேசுவது அயோக்கியத்தனம். அது அரசியல் தர்மமும் நாகரீகமும் கிடையாது.” என்றார்.
பின்னர், கேள்வி கேட்ட பத்திரகையாளரை மதிமுகவினர் தாக்க முயற்சித்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து, பத்திரிகையாளரை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.
இதனால், மதிமுகவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டில் வென்றது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தவெகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும் கடந்த வாரம் வைகோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Commissions, cuting, and corruption under the DMK regime! Vaiko engages in a heated argument with a reporter!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.