விஜய்யிடம் ரூ. 50 கோடி வாங்கினேனா? வைகோ விளக்கம்!
விஜய்யிடம் ரூ. 50 கோடி வாங்கியதாக வெளியான விமர்சனங்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
முதல்வர் விஜய்யிடம் ரூ. 50 கோடி வாங்கியதாக வெளியான விமர்சனங்களுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ விளக்கமளித்துள்ளார்.
மதிமுகவின் 32-வது பொதுக்குழு இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், வருகிற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துடன் சேர்ந்த செயல்படப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டத்துக்குப் பின்னர் சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து வைகோ பேசினார்.
Advertisement
Advertisement
அப்போது அவர் பேசுகையில், “திமுகவுடன் தோழமையில் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக உடன் தோழமை ஏற்படும் வகையில் நமது நடவடிக்கை அமையும்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, நானும் என் குடும்பத்தினரும், என் மகன் திருச்சி எம்.பி.யான துரை வைகோ உள்ளிட்டோர் விஜய்யை சந்தித்து ரூ.50 கோடி வாங்கிவிட்டதாகவும், கோடி கோடியாய் வாங்கியதாக திமுகவினர் அபாண்டமாக பழி சுமத்தி வருகின்றனர்.
கட்சிக்காக 103 ஆண்டுகள் பழைமையான என்னுடைய பூர்வ சொத்தை விற்றிருக்கிறேன். அதேபோன்று சங்கரன்கோவிலின் ஒரு ரத வீதியிலிருந்து மற்றொரு ரத வீதி வரை இருக்கும் வீட்டையும் கட்சிக்காக விற்றிருக்கிறேன்.
ஒரு திரையரங்கிற்கு அருகிலிருந்த இன்றைக்கு ரூ. 30- 40 கோடிக்குப் போகும் இரண்டே கால் ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறேன். 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன்.
இப்படி இருக்கையில், முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாக அபாண்டமாக பொய் பரப்புகிறார்கள். இந்த பொய் குற்றச்சாட்டு மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். கட்சிக்காக சொத்துகளை விற்றவன் நான்.
முன்பு ஜெயலலிதாவிடம் கோடி, கோடியாக பணம் வாங்கியதாக அபாண்டமான பொய்களைப் பரப்பினார்கள். இதில், ஒரு சதவிகிதம்கூட உண்மை கிடையாது. உங்கள் நேர்மையும், நாணயமும் எங்களுக்குத் தெரியும், அதனைப் பொதுவெளியில் சொல்ல வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே தெரிவித்திருக்கிறார்” என்றார் வைகோ.
MDMK General Secretary Vaiko has clarified the allegations that he received Rs 50 crore from Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.