தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியாற்றும் அனைத்து ஜூனியர் வழக்குரைஞர்களுக்கும் குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை வழங்க வேண்டும் என்று அனைத்து வழக்குரைஞர் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குரைஞர்கள் நல நிதிச் சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஃபரிதா பேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தைய தலைமுறையினர் சந்தித்த போராட்டங்களை இளம் வழக்குரைஞர்கள் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது என்றும், இளம் வழக்குரைஞர்களுக்கு வலுவான இடத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒரு இளம் வழக்குரைஞராக துன்பப்படுவது வழக்குரைஞரின் தொழிலின் ஒரு பகுதியாக பார்க்க முடியாது என்றும், இளம் வழக்குரைஞர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை போன்ற பெருமாநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ. 20,000 உதவித்தொகையும், பிற மாவட்டங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ. 15,000 உதவித்தொகையும் வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உதவித்தொகையானது அடிப்படை வாழ்க்கைச் செலவு மற்றும் மாநிலத்தின் நிலவும் செலவுக் குறீயீட்டை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், ‘ஜூனியர் வழக்குரைஞர்’ என்ற வரம்பிற்குள் வருவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை பார் கவுன்சில் முடிவு செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அவர்களின் பாலின அடையாளத்தை பார்க்காமல் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பாலினங்களுக்கு இடையே ஊதியம் வழங்குவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பெரும்பாலும் பேசப்படுவதில்லை என்றும், அதனை தீர்ப்பது மிகவும் முக்கியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மாதந்திர உதவித்தொகையை திருநங்கையர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், வழக்குரைஞர்கள் நல நிதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி – காரைக்கால் வழக்குரைஞர்கள் சங்கங்களுடன் இணைந்து கலந்தாலோசித்து கருத்துருக்களை இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்குரைஞர்கள் சங்கங்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.கே. சந்திரசேகர், ஜூனியர் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க சம்மதிப்பதாகவும், அதற்கான சுற்றறிக்கையை வெளியிட 2 மாதங்கள் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நான்கு வாரங்களுக்குள் சுற்றறிக்கையை வெளியிட்டு, உறுதி செய்யுமாறு நீதிமன்றம் வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.