முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய்: ஏ.ஆர். டெய்ரி மீது வழக்குப் பதிவு

திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தான புகாரின் பேரில் 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு

Updated On : 26 செப்டம்பர், 2024 at 5:44 AM
கோப்புப்படம்
பகிர்:

திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தான புகாரின் பேரில் 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரத்தின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டினாா்.

லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது ஆய்வறிக்கையிலும் உறுதியான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்திருந்தது.

Advertisement

இதனிடையே, லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாருக்கு சொந்தமான ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய ஆணைய தென் மண்டல அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இந்த பால் நிறுவனத்துக்குள் சென்ற மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையினா் நள்ளிரவு 11.30 வரை சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 14 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் பகுப்பாய்வுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பால் நிறுவனம் பெற்ற உரிமம், தரச்சான்றுகள் உள்ளிட்டவை ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. பால் பொருள்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகளின் முடிவுகள் கிடைத்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, புனிதத்தன்மை மீட்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோயில் வளாகத்தில் பரிகாரப் பூஜைகளையும் திங்கள்கிழமை நடத்தியது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலப்பட பொருள் கொடுத்து இறப்பை ஏற்படுத்த முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு வழங்கிய நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்ததாக ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments