கரூர் முதல் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் வரை... Edit - vijay michael
தற்போதைய செய்திகள்

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

நாடு முழுவதும் நிகழாண்டில் நேரிட்ட நெரிசல் பலிகளைப் பற்றி...

இரா. முத்துராஜா

2025 - அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது - ஏனெனில் வெறும் நெரிசலில் சிக்கி மட்டுமே நூற்றிச் சொச்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்!

ஆம், நாடு முழுவதுமே நடைபெற்ற முக்கிய பொதுக்கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குழப்பங்களும், அலறல் சப்தங்களும், உயிர்ப் பலிகளும் அவ்வளவு எளிதில் யார் மனதை விட்டும் நீங்கமுடியாத வடுவாகவே பதிந்துவிட்டன.

கட்சிப் பொதுக்கூட்டம் முதல் விளையாட்டுக் கொண்டாட்டங்கள் வரை போதுமான திட்டமிடல் இல்லாததால் மகிழ்ச்சியான நிகழ்வைப் பலிகொடுத்த தருணங்களாகவும் திகில் காட்சிகளாகவும் மாறின. 2025-ல் மட்டும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேரிட்ட கூட்ட நெரிசல்களில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

“போற இடத்துக்கு பொருள விட்டுப் போகலாம்... உயிரையா விட்டுப் போறது...”, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டில் கூட்ட நெரிசல் என்பது சாதாரணமானதுதான். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பது என்பது இயல்பானது அல்ல. கண் இமைக்கும் நேரம்போதும் கடல் அலைகள் சுனாமியாக மாறி காவு வாங்குவதற்கு; அதேபோலத்தான், கூட்டமும் நெரிசலும் சாதாரணமாக வரிசையாக செல்லும்போது ஒன்றும் தெரியாது. திடீரென முன்னும் பின்னும் தள்ளினாலே நேரிடும் கூச்சல் குழப்பத்தில் பலரையும் பலரின் உயிரையும் இழக்க நேரிடலாம்.

அதே போல,இனியும் இப்படி நடைபெறக் கூடாது என்று நினைவுகூரவேனும், நிகழாண்டில் நாடு முழுவதும் நேரிட்ட கூட்ட நெரிசல்கள் மற்றும் உயிர்ப் பலி சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் கூட்ட நெரிசல்

ஆண்டின் முதல் நெரிசல் பலி திருப்பதியில்தான் தொடங்கியது. உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கவும், வைகுண்ட வாயில் வழியாகச் செல்லவும் தரிசன டிக்கெட்டுகள் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 5 மணிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 9 இடங்களில் 94 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருப்பதி ஏழுமலையான் கோயில் கூட்ட நெரிசல்.

இந்த கவுன்ட்டர்களில் பக்தர்கள் புதன்கிழமை காலை முதல் காத்திருக்கத் தொடங்கினர். கூட்டத்தைக் கையாளும் நேர்த்தி மற்றும் சரியான திட்டமிடலுக்குப் பெயர்பெற்ற திருப்பதியில் சாதாரண நாள்களிலேயே கூட்டம் நிரம்பி வழியும். திருப்பதியில் சர்வ சாதாரணமாகவே 70 முதல் 80 ஆயிரம் பக்தர் சாமி தரிசனம் செய்வார்கள். அதுவும் வைகுண்ட ஏகாதசி என்றால் செல்லவா வேண்டும். இதனால், அனைத்துப் பகுதியில் உள்ள கவுன்ட்டர்களும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

புதன்கிழமை இரவு 9 மணி அளவில் வெளியில் காத்திருந்த பக்தர்கள் அனைவரும் தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் தரிசன வரிசைகள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் நெருக்கிக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது நேரிட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்து, அதில் சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மகா கும்பமேளா

திருப்பதியில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான சரியாக 20 நாள் கழித்து, உலகின் மிகப் பெரிய ஆன்மிக - கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, 144 ஆண்டுகளுக்குப் பின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்துகொண்டனர்.

கும்பமேளா கூட்ட நெரிசல்.

இதில், இந்துகளின் மிகவும் புனித நாள்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹிந்து நாள்காட்டியில் கூறப்படும் மௌனி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட முயன்றபோது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் கொல்லப்பட்டனர்.

தன் உயிரைவிட பக்தி மேலெனக் கருதிய மக்கள் கூட்டம் காவல் துறையின் தடுப்புகளை உடைத்து ஆற்றங்கரையின் திரிவேணி சங்கமத்தை நோக்கி ஓடி, வழியில் இருந்த மற்றவர்களையும் மிதித்ததே பலர் கொல்லப்பட்டதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஓராண்டை எட்டியும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? என்பது குறித்த சரியான தகவல்களை மத்திய அரசோ, ஆளும் உத்தரப் பிரதேச அரசோ இன்று வரை வெளியிடவில்லை.

தில்லி ரயில் நிலையக் கூட்ட நெரிசல்

மகா கும்பமேளாவின் ஒருபகுதியாக புதுதில்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் விரைவு ரயிலுக்காக நடைமேடை 14-இல் ஜனவரி 29 ஆம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். இதற்கிடையே, ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-இல் திரண்டனர். இதனால் நடைமேடை 14 மற்றும் 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் அதிகளவில் மக்கள் கூடியது நெரிசலுக்கு வழிவகுத்தது.

தில்லி ரயில் நிலையத்தில்..

ரயில்களில் ஏறுவதற்கு அவசரமாக வந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கியதில் நான்கு குழந்தைகள் உள்பட 18 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மாலை 6 மணி முதல் கூட்டம் அதிகரித்ததால், ஒரு மணி நேரத்திற்கு 1,500 என்ற விகிதத்தில் முன்பதிவு செய்யப்படாத 7,600 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதும் போதுமான அளவில் ரயில்கள் இயக்காததும் அதிகளவிலான பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத பொது பயணச் சீட்டுகள் விற்கப்பட்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய ரயில்வே காவலர்கள் பணியில் இல்லாததும் கூட்டநெரிலுக்கு காரணமாக அமைந்தது.

கோவா கூட்ட நெரிசல்

இந்தியாவின் மேற்கு கடற்கரை மாநிலமான கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கட்டடக் கலை பாணிகளின் கலவைக்கு பெயர் பெற்ற வடக்கு கோவாவின் ஷிர்காவோவில் உள்ள லைராய் தேவி உள்ளது. இந்தக் கோயில் கோவாவைச் சுற்றியுள்ள மௌலிங்கெம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள், லைராய் தேவிக்கு மத சடங்குகள், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

லைராய் ஜாத்ரா திருவிழா.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு மே மாதமும் லைராய் ஜாத்ரா திருவிழா நடத்தப்படுகிறது. பாரம்பரிய தீ மிதி சடங்கைக் கொண்ட இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்தக் கோயிலில் தீ மிதித் திருவிழாவின் போது கரும்பு ஒன்றையும் கையில் வைத்துக் கொண்டு பக்தர்கள் தீ மிதிப்பதை ஐதீகமாகக் கொண்டுள்ளனர்.

மே மாதம் 3 ஆம் தேதி அன்று கோயிலில் பக்தர்கள் சரிவான பாதையில் சென்றபோது நேரிட்ட கூட்ட நெரிசலில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசல்

வழிபாட்டுத் தலங்களில் எந்தளவிற்கு கூட்டம் கூடுகிறதோ, அதே அளவுக்கு கிரிக்கெட் வீரர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் காண வேண்டுமென்ற வெறியும் வேட்கையுமே பெரும் இழப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கென்று ஒரு மதம் ஒன்றிருந்தால், அதில் குறைந்தபட்சம் 25 முதல் 50 கோடி பேர் இருப்பார்கள். அதனொரு பகுதியாக கிரிக்கெட் ரசிகர்களுக்கென நாட்டிலுள்ள முக்கிய பெருநகரங்களில் இரண்டரை மாதங்களாக நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளின் உச்சமாக அகமதாபாத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக கோப்பையை வென்ற உற்சாகத்தில் கர்நாடகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே குறிப்பாக பெங்களூருவில் இரவு முழுவதும், தொடர்ந்து மறுநாள் பகலிலும் ஒரே கொண்டாட்டம். போட்டி முடிந்த மறுதினமே அதுவும் வேளை நாளின் மாலையில் கர்நாடக சட்டப்பேரவையான விதான் சௌதா வழியாக ஆர்சிபி அணியின் சாலை உலா, தொடர்ந்து சின்னசாமி அரங்கத்தில் பாராட்டு விழா என உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டது.

வேலை நாளாக இருந்தாலும், ஏற்கெனவே இரவு முழுக்கக் கொண்டாட்டம். சமாளிக்க இயலாது, வேண்டாம் என காவல்துறை மறுத்திருக்கிறது. ஆனாலும் வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்கள் தாயகத்துக்குச் செல்ல முடிவெடுத்ததால் திடீரென வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் திட்டமிட்டிருக்கின்றனர்.

விதான் சௌதா வளாகத்தில் ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம்.

மாநகர் வீதிகளிலெல்லாம் மக்கள் திரளும் வேகத்தைப் பார்த்துவிட்டு, பேரணி எல்லாம் இல்லை, பெங்களூரு திடலுக்கு வரச்சொல்லி அறிவித்திருக்கின்றனர். இவையெல்லாம் மக்களைச் சென்றடையாத நிலையில். சாலையோரங்களில் நின்று பேரணியைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைத்தவர்கள்கூட பெருங்கூட்டமாக சின்னசாமி அரங்கத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

சின்னச்சாமி கிரிக்கெட் திடலில் 35,000 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், திரண்டுவந்ததாக அரசுத் தரப்பு தகவலே இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர். இந்த அரங்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறபோது காவல்துறையினர் 800 பேர் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பேரணிக்காக 1600 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். அரங்கத்துக்குள் கூட்டம் நிரம்பிவழிய, கதவுகள் எல்லாம் சாத்தப்பட்டுவிட, தாண்டி உள்ளே செல்ல ரசிகர்கள் முயன்றிருக்கிறார்கள். அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடியும் நடத்தினர். இதனால், அங்கும் இங்கும் ஓடிய மக்கள், மரங்கள், சுவர்கள் மீதும் ஏறினர். அரங்கத்துக்கு வெளியே, ஆறாவது வாசல் உள்பட பல இடங்களில் பெரும் நெரிசலில் மூச்சுத் திணறியும் மிதிபட்டும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புரி ஜெகந்நாதர் கோயில்

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோயிலில் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற ரத யாத்திரை விழாவில் அதிகாலை நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பக்தர்கள் பலியாகினர்.

ஹரித்வார் கூட்ட நெரிசல்

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஜூலை 27 ஆம் தேதி மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் உத்தரபிரதேசம், பிகார் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 12 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் அடங்குவர். மின்சார கேபிள் உடைந்து படிக்கட்டுகள் வழியாக மின்சாரம் பாய்ந்ததாக வதந்தி பரவியதாலேயே பக்தர்கள் மத்தியில் பீதியடைந்து ஓட்டம்பிடித்ததில் நேரிட்ட கூட்ட நெரிசலே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல்

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாகவும், கருப்பு நாளாகவும் கரூர் சம்பவம் சோக வரலாற்றில் இடம்பெற்றது.

தமிழ்நாட்டின் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று நடத்திய பொதுக்கூட்ட பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறியதில் மொத்தம் 41 பேர் பலியாகினர்.

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது...

சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான மக்கள் வந்ததாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் விஜய்யைக் காண அந்த இடத்தில் கூடியிருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு வரவிருந்த விஜய், இரவு 7.30 மணிக்கு வந்ததாலும், மிகவும் நெருக்கமான பகுதியில் நீண்ட நேரமாக குடிநீர், உணவு எதுவுமின்றித் தவித்த மக்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகினர்.

ஸ்ரீகாகுளம் நெரிசல்

ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நவம்பர் 1 ஆம் தேதி ஏகாதசி பண்டிகையையொட்டி ஏராளமான பக்தர்கள் கூடியதில், நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய எட்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட ஒன்பது பேர் இறந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோயில் நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாதவை உயிர்ப் பலிகளுக்கு காரணமாக அமைந்தது.

கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது எப்படி?

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் மத்தியில் ஒரேயொரு மெல்லிய கோடுதான். நாம் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதும்! கூட்ட நெரிசலில் சிக்கி தப்பிப்பதற்கு உறுதியான வழி இல்லாவிட்டாலும், அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளைப் பின்பற்ற காவல் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

கூட்ட நெரிசலின்போது நீங்கள் கீழே விழுந்தால், மீண்டும் எழுந்திருப்பது மிகவும் கடினம், நீங்கள் மிதிக்கப்படுவதற்கான ஆபத்து உள்ளது. அதனால், அருகில் இருக்கும் சுவர் போன்ற பகுதியைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். நெரிசலின் போது பெரும்பாலான நேரம் உயிரிழப்புகள் மூச்சுத்திணறல் காரணமாகவே நிகழ்கின்றன. இதனால், மார்பு மீது கைகளை வைத்து பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுங்கள்.

சௌதி அரேபியா, தென் கொரியா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக கூட்ட நெரிசலை வெகுவாகக் குறைத்திருக்கின்றன.

வளர்ந்துவரும் நாடுகளில் முன்னணியில் இருப்பது மட்டும் முக்கியமானது கிடையாது. மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுய ஒழுக்கமும் தேவைப்படுகிறது. இருப்பினும், அதிகளவில் கூட்டம் கூடும் இடங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கலந்துகொள்வதைத் தவிர்த்தாலே கூட்ட நெரிசலில் நேரிடும் உயிர்ப் பலிகளைத் தவிர்த்துவிடலாம்!

India witnessed a troubling rise in stampedes across the country in 2025, with multiple religious gatherings, festivals, and public events turning tragic. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் கைப்பேசிகள்

பெரியாா் பல்கலை.யில் வரும் 5-ஆம் தேதி 24-ஆவது பட்டமளிப்பு விழா

கூலி உயா்வு வழங்கக் கோரி கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் மனு

‘என் ஊா் - என் கனவு’ திட்டம்: செயல் திட்டம் தயாரிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

SCROLL FOR NEXT