சார்தாம் யாத்திரை: வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்! 165 பேர் பலி!
உத்தரகாண்டில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் இந்தாண்டு இதுவரை 165 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரகாண்டில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் இந்தாண்டு வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் கூடியுள்ளது. ஆனால், உயரமான மலைப்பகுதிகளில் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பலர் பலியாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
சார்தாம் யாத்திரை இந்தாண்டு ஏப்ரல் 19 அன்று கங்கோந்த்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டதுடன் தொடங்கியது. இது தொடங்கி 49 நாள்களில் 165 பக்தர்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான பக்தர்கள் மாரடைப்பு காரணமாக பலியானதாக மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 3 மரணங்கள் வீதம் நிகழ்ந்துள்ளது. ஹிமாலய புனிதத் தலங்களான 4 கோவில்களை இதுவரை 31,65,746 பேர் தரிசித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டுகளை விட வரலாறு காணாத அளவில் இந்தாண்டு அதிக பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த புனித யாத்திரை நவம்பர் 13 வரை நடைபெறவுள்ளது.
மூத்த அதிகரி ஒருவர் பேசுகையில், “பக்தர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட இந்தாண்டு மிக அதிகம். மருத்துவக் குழுக்கள் அனைத்து பாதைகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதிக உயரம், கடுமையான வானிலை, ஏற்கனவே இருக்கும் உடல் நலக் கோளாறுகள் ஆகியவை பக்தர்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன” என்றார்.
கேதர்நாத் வழித்தடத்தில் மட்டுமே அதிகபட்சமாக 80 பேர் வரை பலியாகியுள்ளனர். பத்ரிநாத் வழித்தடத்தில் 48 பேரும், யமுனோத்ரி பாதையில் 21 பேரும், கங்கோத்ரியில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
பருவமழைக்காலம் ஜூன் 21 முதல் தொடங்கும் நிலையில், யாத்திரையில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்வது கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, பருவமழைக் காலத்தில் மண்சரிவு, சாலைத் தடைகள், மோசமான வானிலை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால், பருவமழக் காலம் முடிந்ததும் மீண்டும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையின் முதுகெலும்பாக உள்ள சார்தாம் யாத்திரை போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள், குதிரை இயக்குபவர்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் என பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இதைச் சார்ந்து இயங்கி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநில அரசு இந்தாண்டு பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் பக்தர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 47 லட்சம் பேர் யாத்திரைக்கு பதிவு செய்தனர்.
மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைச்சுற்றல் அல்லது அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் கொண்ட பக்தர்கள் அதனைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.