முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

கடந்த இரண்டு வாரங்களாக அதிமுக - திமுக கூட்டணிக்கும் இடையேயான இருமுனைப் போட்டியாகத் தான் இருக்கிறது என அண்ணாமலை கூறியது குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 8:32 pm IST
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை - டிஎன்எஸ்
பகிர்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான இருமுனைப் போட்டியாக மாறும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக என்டிஏ கூட்டணி, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் இடையேயான இருமுனைப் போட்டியாகத் தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தவெக தலைவர் விஜய் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை ஒருவர் கணக்குப் போட்டுச் சொல்லியிருந்தார். விஜய் கொடுத்திருக்கும் மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சுமார் ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் கோடி தேவைப்படும். தமிழகத்தின் மொத்த நிதிநிலை அறிக்கையே ரூ.4.50 லட்சம் கோடிதான். ​ஆனால் தவெக கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையைத் தாண்டி இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

விஜய்யை பொருத்தவரை, அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்களிடம் ஈர்ப்பு இருக்கிறது. சில இடங்களில் நல்ல வாக்குகளை வாங்குவார். அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

​ஆனால், தேர்தல் களம் கடந்த இரண்டு வாரங்களாக 'இருமுனைப் போட்டி'யாகத்தான் இருக்கிறது. விஜய்யின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்பது என் கணிப்பு.

தேவாலயத்திற்கு வருகிறவர்களுக்கு வெளியே நின்று துண்டு பிரசுரம் கொடுக்கிறார்கள். மதத்தை பின்பற்றக்கூடிய இடங்கள் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எல்லோரும் கோயிலுக்குப் போகலாம், பிடித்தவர்கள் தேவாலயத்திற்கு போகலாம், மசூதிக்கு போகலாம், அதில் எந்தத் தவறும் கிடையாது. அதேபோல பாதிரியாருக்குப் பிடிக்கும் என்பதால் அவர் முதல்வரை சென்று பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பம்.

​ஆனால், தேவாலயத்திற்கும், மசூதிக்கு வெளியே நின்றுகொண்டு ஒரு வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்துச் செயல்படுவது கண்டிப்பாக அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொகுதி வரையறை மசோதா குறித்து திமுகவின் கீழ்மட்ட தொண்டர்களுக்கும், நடுவில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் புரிதல் இல்லை என்று அவர் கூறினார்.

பின்னர், அவர் தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை வலம் சென்று வாக்கு சேகரித்தார். இதையடுத்து, அவர் தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

summary

It is a bipolar contest between the AIADMK and DMK alliances Says Annamalai ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.