தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என அன்புமணி கூறியிருப்பது...
மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்த மாநிலத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிர்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின்அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. மாநிலங்களின் மின்தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் இம்முடிவை ஏற்க முடியாது.
Advertisement
இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழுவின் 16-ஆம் கூட்டமும், தென்னிந்திய மண்டல மின்சாரக் குழுவின் 37-ஆம் கூட்டமும் அண்மையில் நடைபெற்றன. அந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதியை, அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறையை நிறுத்தவும், மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அனைத்து மாநில மின்சார வாரியங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களின் மின்வாரியங்களுக்கும் மின்வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டில் எந்த மாநிலமும் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏப்ரல் 24 -ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த மின்தேவை 20,444 மெகாவாட் ஆகும். இதில் 2857 மெகாவாட் மின்சாரம் மட்டும் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள மின்சாரத் தேவையில் சுமார் 16 ஆயிரம் மெகாவாட்டை மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்தும், தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்தும் தான் தமிழ்நாடு மின்வாரியம் வாங்குகிறது.
தமிழ்நாட்டின் மின்தேவையில் மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைப்பது மட்டும் 6998 மெகாவாட் ஆகும். இதில் வள்ளூர் அனல் மின் நிலையத்திலிருந்து 1062.40 மெகாவாட், என்.எல்.சியில் இருந்து 1721.80 மெகாவாட், எண்ணூர் அனல் மின்நிலையத்தில் இருந்து 364.47 மெகாவாட், தூத்துக்குடியில் உள்ள என்.டி.பி.எல் அனல் மின்நிலையத்திலிருந்து 410 மெகாவாட், கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் இருந்து 330.50 மெகாவாட், கூடன்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து 1125 மெகாவாட் என மொத்தம் 5014 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டில் உள்ள மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு சராசரியாக 50 விழுக்காடும், கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து சராசரியாக மூன்றில் இரு பங்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தை விட மிகக்குறைந்த விலையில் மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் ரூ.45,000 கோடிக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதற்கு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது காரணம் என்றால், இவ்வளவு இழப்பையும் தாங்கிக் கொண்டு மின்வாரியம் தொடர்ந்து செயல்படுவதற்கு முக்கியக் காரணம் மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து குறைந்த விலைக்கு கிடைக்கும் மின்சாரம் தான். இதை தமிழ்நாடு மின்வாரியத்தால் ஒருபோதும் இழக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் முன்னுரிமை அடிப்படையில் குறைந்த விலைக்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, போட்டி ஏல முறையில் விலையை நிர்ணயம் செய்தால், மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழலில் ஏற்கனவே திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை சமாளிக்க ஏற்கனவே, ரூ.45,000 கோடி மின்கட்டண உயர்வு மக்கள் மீது சுமத்தப்பட்ட நிலையில், இன்னும் கூடுதலாக மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும். இன்றைய சூழலில் இன்னொரு மின்சாரக் கட்டண உயர்வை தமிழ்நாட்டு மக்களால் தாங்கவே முடியாது.
தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்கள், அந்த மாநிலத்தின் மின்வாரியத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவது சலுகை அல்ல. அது மாநிலங்களின் உரிமை. மத்திய மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நிலத்தை மாநிலங்கள் தான் வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, அனல் மின்நிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், சுகாதாரக் கேடுகள் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளையும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தான் அனுபவிக்கின்றனர். என்.எல்.சி சுரங்கங்கள், மின்நிலையங்களால் கடலூர் மாவட்டத்திலுள்ள 30 லட்சம் மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின்நிலையங்களால் ஏற்படும் கதிர்வீச்சு ஆபத்துகளை அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தான் எதிர்கொண்டு வருகின்றனர்.
மத்திய மின்னுற்பத்தி நிலையங்களால் ஏற்படும் ஆபத்துகளையும், பாதிப்புகளையும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்ள வேண்டும்; ஆனால், அவற்றின் உரிமைகளை அவற்றுக்கு வழங்காமல், மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே, மத்திய மின்னுற்பத்தி நிலையங்கள் தங்களின் முடிவை கைவிட்டு, இப்போது நடைமுறையில் உள்ளவாறே அவை அமைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.