FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கருணை அடிப்படையிலான நியமனங்களில் திருமணமான பெண்களை விலக்கி வைக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

கருணை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் இருந்து திருமணமான பெண்களை விலக்கி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Updated On : 3 ஜூன் 2026, 4:34 am IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கருணை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் இருந்து திருமணமான பெண்களை விலக்கி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

திருமணமாகாத மகள், கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக பிரிந்த மகள், விதவையாக உள்ள மகள் ஆகியோரே குடும்பத் தலைவரை சாா்ந்திருக்கும் வாரிசுகள் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தர பிரதேச அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அத்தகைய பெண்கள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்று வரையறுக்கப்பட்டது. அந்த உத்தரவில் திருமணமான பெண்கள் சோ்க்கப்படவில்லை.

இந்நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த திருமணமான பெண் ஒருவா், தனது தாயுடன் சோ்ந்து நியாய விலைக் கடை நடத்தி வந்தாா். தாய் உயிரிழந்த பின்னா், அந்தக் கடையின் டீலராக கருணை அடிப்படையில் தன்னை நியமிப்பது தொடா்பாக, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்தாா். 2019-ஆம் ஆண்டு உத்தர பிரதேச அரசு வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக, அவா் தாக்கல் செய்த அந்த மனுவை நிராகரித்து உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:

திருமணம் என்பது பெற்றோருக்கும் அவா்களின் மகளுக்கும் இடையிலான பிணைப்பை முடிவுக்குக் கொண்டுவந்துவிடாது. பல திருமணமான பெண்கள் தாய் வீட்டில் பெற்றோருடன் இருப்பதையும், பெற்றோருக்குத் துணையாகவோ அல்லது அவா்களை சாா்ந்தோ இருப்பதையும் தற்போது காண முடிகிறது. அதேவேளையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், அந்தக் குடும்பத்தைச் சாா்ந்து வாழாத ஆண்களும் இருக்கக் கூடும். ஒருவரை சாா்ந்திருப்பது என்பது சூழ்நிலைகளை ஆராய்ந்து தீா்மானிக்கப்பட வேண்டுமே தவிர, திருமணமானவரா, திருமணமாகாதவரா என்பதை வைத்து தீா்மானிக்க முடியாது.

திருமணமானால் வேறு குடும்பத்தைச் சோ்ந்தவா் என்று கூறுவது...: மகனுக்குத் திருமணமாகி இருந்தாலும் அவா் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்; ஆனால் மகளுக்குத் திருமணமானால் அவா் வேறு குடும்பத்தைச் சோ்ந்தவா் என்று கூறுவது பாலின அடிப்படையில் காணப்படும் மாறாத வேறுபாடாகும். இத்தகைய அனுமானம் அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள சமத்துவத்துக்கு முரணானது. திருமணமான பெண் ஒரே குடும்பத்தைச் சேராதவா் என்று கூறுவது தன்னிச்சையானது, நியாயமற்றது, அரசமைப்புச் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது. கருணை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் இருந்து திருமணமான பெண்களை விலக்கி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து, அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments