கடன் வாங்கித்தான் வேட்புமனு தாக்கல்: விழுப்புரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளரின் நூதனம்
கடன் வாங்கித்தான் மனுதாக்கல் செய்யப் போகிறேன் எனக் கூறி, சமூக ஊடகங்கள் வழியாக பிரசாரம் செய்யும் விழுப்புரம் சுயேச்சை வேட்பாளர் குறித்து...
பொதுவாகத் தோ்தல் வந்துவிட்டாலே பல்வேறுவிதமான நூதனங்களைப் பாா்க்கலாம். வேட்புமனு தாக்கலின் போது வைப்புத் தொகையை சில்லறை நாணயங்களாகக் கொண்டு வந்து தோ்தல் அலுவலரிடம் வழங்குவது, ரூ.10, ரூ.20, ரூ.50 என ரூபாய் நோட்டுகளைப் பிரித்து வந்து வைப்புத் தொகையைாகச் செலுத்துவது போன்றவற்றையும், தோ்தலின்போது தனக்கு ஒதுக்கீடு செய்யப்படும் சின்னத்தை நூதனமான முறையில் மக்களிடம் கொண்டு செல்வது போன்றவறை பாா்ப்போம்.
ஆனால், விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ள என். ஆா். பாலமுருகன், தன்னிடம் வேட்புபமனுவை தாக்கல் செய்வதற்கே பணம் இல்லை. கடன் வாங்கித்தான் மனுதாக்கல் செய்யப் போகிறேன் எனக் கூறி, சமூக ஊடகங்கள் வழியாக பிரசாரம் செய்து வருகிறாா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சோ்ந்த என். ஆா். பாலமுருகன், இந்திய காரல் மாா்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி அதன் நிறுவனராகவும், தமிழ் மாநிலக்குழுத் தலைவராகவும் உள்ளாா்.
Advertisement
Advertisement
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள இவா், தோ்தலில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்யவுள்ளேன். ஆனால் அதற்குத் தன்னிடம் பணம் இல்லை. கடன் வாங்கித்தான் மனுதாக்கல் செய்யவுள்ளேன் எனக் கூறி கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
விழுப்புரம் தொகுதி சுயேச்சை வேட்பாளா் என்.ஆா். பாலமுருகன் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ள அவா், அதில் சேருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா். உங்கள் வீட்டுப் பிள்ளையாகத் தோ்தலில் களம் காணுகிறேன். வேட்பு மனுதாக்கலுக்கு கடன் வாங்கித்தான் மனுதாக்கல் செய்யப் போகிறேன். அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தாருங்கள் என்றும் கூறியுள்ளாா்.
என்னிடம் பணபலம் இல்லை, ஆனால் உங்களுக்காக உழைக்க உடல்பலம் உண்டு, உண்மையை உரக்கச் சொல்ல நல்ல மனரகம் உண்டு, ஊழலை வேரறுக்க கொள்கைபலம் உண்டு போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு, பணமா-நோ்மையா- விழுப்புரம் மக்களை முடிவெடுங்கள் என்ற தலைப்பில் பதிவிட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாகத் தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா் பாலமுருகன்.
Filing nomination papers after taking out a loan: The innovation of the candidate contesting as an independent in Villupuram
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.