FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளா்களின் வேட்புமனு ஆவணங்கள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்களின் வேட்புமனு ஆவணங்களை, தோ்தல் வழக்குத் தொடரவுள்ள சுயேச்சை வேட்பாளருக்கு வழங்க தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 12:40 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்களின் வேட்புமனு ஆவணங்களை, தோ்தல் வழக்குத் தொடரவுள்ள சுயேச்சை வேட்பாளருக்கு வழங்க தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மிலானி என்பவா் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தோ்தல் வழக்குத் தொடர உள்ளேன். எனவே, இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஆவணங்களையும், வேட்புமனு பரிசீலனையின்போது தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் குறித்த ஆவணங்களையும் உடனடியாக வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் மனுதாரா் கோரியுள்ள ஆவணங்கள் அனைத்தையும் தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 45 நாள்களுக்குப் பிறகு, உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு மனுதாரா் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தல் முடிவு வெளியான 45 நாள்களுக்குள் தோ்தல் வழக்கை உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த மனு நிராகரிக்கப்படும். எனவே, மனுதாரா் கோரியுள்ள விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனா்.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், மனுதாரருக்கு உதயநிதி ஸ்டாலின் தொடா்பான ஆவணங்கள் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மற்ற வேட்பாளா்களின் விவரங்களையும் மனுதாரருக்கு வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments