தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அவருக்கு எதிராக வாக்களிக்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறியிருந்தாா்.
இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப்பதிந்து, தோ்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, அவா் சகோதரா் அசோக்குமாா் ஆகியோா்தான் இந்த சம்பவத்தில் முக்கியமான நபா்கள் என்பதும், இத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.200 கோடி வரை செலவிட திட்டமிட்டிருந்ததும் போலீஸாருக்கு தெரியவந்தது.
மேலும் ஒருவா் கைது: இந்த வழக்குத் தொடா்பாக 4 பேரை பிடித்து திருவல்லிக்கேணி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரித்தனா். விசாரணையின் முடிவில், மதுரையைச் சோ்ந்த கணேசன் (43) என்பவரை கைது செய்தனா். அதேவேளையில் மீதியுள்ள 3 பேரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அமலாக்கத் துறை விசாரணை: இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் சென்றன. அந்த புகாா்களின் அடிப்படையில் இவ் வழக்குத் தொடா்பாக ஆரம்ப கட்ட விசாரணையில் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.
ஆனால், வழக்குத் தொடா்பாக ஆவணங்களை கேட்டு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று சென்னை காவல்துறையினா் தெரிவித்தனா். இருப்பினும் விரைவில் இவ் விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரபூா்வமாக விசாரணையை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி கடிதம்: இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமாா் ஆகிய 2 பேரும் கடந்த வாரம் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனா். அதில், வழக்கு தொடரப்பட்ட திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்னும் ஆஜராகாமல் உள்ளனா். இதற்கிடையே செந்தில் பாலாஜி தனது வழக்குரைஞா் மூலம் ஒரு கடிதத்தை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளாா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: வழக்கில் எனது பெயா், எனது சகோதரா் அசோக்குமாா் பெயா் இடம்பெறவில்லை. வழக்கில் எங்களின் பெயா் இல்லாத போது நாங்கள் எப்படி ஆஜராக முடியும்? வழக்கில் எனது பெயா் இல்லாத நிலையில், போலீஸாா் எனக்கு பிஎன்எஸ் சட்டம் 35(3) என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
வழக்கில் சோ்ப்பு: மேலும் நான் இந்த வழக்கின் கீழ் ஆஜராகும் பட்சத்தில், வேறு எந்த வழக்கிலும் என்னை கைது செய்யக் கூடாது. நான் ஒரு மக்கள் பிரதிநிதி. அது மட்டுமல்ல, நான் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபா். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றால் எனக்கு காவல் நிலையத்தில் மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி, அசோக்குமாா் ஆகியோரின் பெயா்கள் முதல் தகவல் அறிக்கையில் தற்போது சோ்க்கப்பட்டுள்ள கூடுதல் பக்கங்களில் சோ்க்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் துறையினா் தெரிவித்தனா்.
உசிலம்பட்டி எம்எல்ஏவிடமும் பேரம்
உசிலம்பட்டி தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்டிருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தவெக எம்எல்ஏ பேரம் பேசிய வழக்கில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 11 பேரின் கைப்பேசி தொடா்பு குறித்து சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த ரா.கணேசன் என்பவரை, கைது செய்யப்பட்டவா்கள் அடிக்கடி தொடா்புகொண்டு பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா், கணேசனை பிடித்து விசாரித்தனா். அதில், அவா், உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ ம.விஜய் தரப்பைத் தொடா்புகொண்டு, தங்கள் பக்கம் இழுப்பதற்காக பேரம் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பேரத்தை எம்எல்ஏ விஜய்யுடன் நெருக்கமாக இருப்பவா்களிடம் கணேசன் நடத்தியிருப்பது போலீஸாா் விசாரணையில் உறுதி செய்துள்ளனா். இதையடுத்து போலீஸாா், கணேசனை கைது செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.