FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மருத்துவா் உள்பட 2 போ் கைது; ரூ.56 லட்சம் பறிமுதல் - மேலும் ஒருவருக்கு ‘லுக்அவுட் நோட்டீஸ்’

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் மருத்துவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் நபருக்கு எதிராக சென்னை காவல் துறை ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 1:17 am IST
மாதிரிப் படம்
பகிர்:

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் மருத்துவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் நபருக்கு எதிராக சென்னை காவல் துறை ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அவருக்கு எதிராக வாக்களிக்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தோ்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு இந்தச் சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை அழைப்பாணை வழங்கியது. ஆனால், இருவரும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து, அவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

5 பேரிடம் விசாரணை: கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ், காா்த்திக் ஆகிய 5 பேரை கடந்த புதன்கிழமை முதல் 2 நாள்கள் தங்களது காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

முக்கியமாக, இந்த வழக்கில் திருப்பூா் மாவட்டம் காங்கேயம் அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த மருத்துவா் டாக்டா் த.ராஜசேகா் (50), கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த சேதுராஜ் (57) உள்ளிட்ட சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இருவா் கைது: அதன் அடிப்படையில் திருப்பூா், பெங்களூரு விரைந்த போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரித்தனா். மேலும் அவா்களது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனா். அதில், அங்கிருந்து கணக்கில் வராத ரூ.56.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் சென்னை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில், இந்த வழக்கில் அவா்களுக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்தாக சென்னை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு தெரிவித்தனா்.

‘லுக்அவுட்’ நோட்டீஸ்: இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸை சென்னை காவல் துறை வழங்கியுள்ளது. ஆனால், லட்சுமணபெருமாள் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறும் நிலையில், அதுதொடா்பாகவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலும், இந்த வழக்குத் தொடா்பாக நாமக்கல் மாவட்டம் மோனூரைச் சோ்ந்த ஒரு மருத்துவா், பெங்களூரைச் சோ்ந்த ஒரு இளைஞா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments