செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் முன்பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் ‘சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக தீா்மானம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பின்போது, தாங்கள் கூறும்படி நடந்து கொண்டால், ரூ.35 கோடி வரை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகக் கூறியிருந்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா், சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
அதில், எம்எல்ஏவை தொடா்புகொண்டு பேசியதாகவோ, பேரம் பேசியதாகவோ, மிரட்டல் விடுவித்ததாகவோ முதல் தகவல் அறிக்கையில் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதால், முன்பிணை வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
அப்போது மனுதாரா் தரப்பில், அதுவரை காவல் துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.