FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

செந்தில் பாலாஜி சகோதரா் அசோக்குமாா் முன்பிணை கோரி வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்றம்

செந்தில் பாலாஜி சகோதரா் அசோக்குமாா் முன்பிணை கோரிய வழக்கு குறித்து...

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி
பகிர்:

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தாக்கல் செய்த வழக்கை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எம்எல்ஏவை தொடா்புகொண்டு பேசியதாகவோ, மிரட்டல் விடுத்ததாகவோ முதல் தகவல் அறிக்கையில் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதால், எனக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்ட்டது. மேலும், இந்த வழக்கில் எம்எல்ஏ சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வரும் புதன்கிழமை (ஜூலை 8) விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments