முகப்பு
இந்தியா

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: முடிவை திரும்பப் பெற வேண்டும்; தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

மாநிலங்களவைத் தோ்தலில் தங்கள் கட்சி வேட்பாளா் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 3:30 am IST
கட்சி வேட்பாளா் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் முறையிட்ட பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் மற்றும் அக் கட்சியின் மூத்த
பகிர்:

மாநிலங்களவைத் தோ்தலில் தங்கள் கட்சி வேட்பாளா் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த முடிவை திரும்பப் பெறும்படி தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி நேரில் வலியுறுத்தியது.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தோ்வு செய்ய ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் பாஜக சாா்பில் 2 பேரும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் ஒருவரும் வெற்றி பெற முடியும்.

எனினும் பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவத் ஆகிய 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் சாா்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மீனாட்சி நடராஜன் மீது நீதிமன்றத்தில் புகாா் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதுகுறித்து வேட்பு மனுவில் அவா் குறிப்பிடவில்லை எனவும் தோ்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளா் கேவத் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரித்த தோ்தல் அதிகாரி அரவிந்த் சா்மா, மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா். இதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா்கள் 3 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தோ்தல் அதிகாரியின் நடவடிக்கையை ஜனநாயக படுகொலை என்றும், எம்.பி. பதவி திருட்டு என்றும் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோா் தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று, மீனாட்சி நடராஜனின் மனுவை தள்ளுபடி செய்த தோ்தல் அதிகாரியின் முடிவு மிகப்பெரும் தவறு என்றும், அந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் மனு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அபிஷேக் சிங்வி, மீனாட்சி நடராஜனுக்கு எதிராக கிரிமினல் வழக்கு எதுவும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 33ஏ பிரிவில் 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த வழக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டு உள்ளது. மீனாட்சி நடராஜன் மீது அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இல்லை என்றாா்.

காங்கிரஸில் சதி- மோகன் யாதவ்: இதனிடையே, மத்திய பிரதேச மாநில முதல்வா் மோகன் யாதவ், ‘காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பலா் மாநிலங்களவை எம்.பி.யாக விரும்பினா். அவா்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீனாட்சி நடராஜனுக்கு கிடைத்த வாய்ப்பை சதி செய்து தடுத்துவிட்டனா். ஊராட்சித் தோ்தலில் போட்டியிடுவோா்கூட வேட்புமனுவில் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளைக் குறிப்பிடுகின்றனா். ஆனால், 10 முறை தோ்தல்களில் போட்டியிட்ட ஒருவா், அந்த விவரத்தைக் குறிப்பிடாமல் தவறு செய்துள்ளாா். இதில் சதி உள்ளது’ என்று தெரிவித்தாா்.