அமைச்சரவையில் பங்கு என்ற காரணத்திற்காக முடிவு எடுக்க முடியாது: திருமாவளவன்
அமைச்சரவையில் இடம் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியாது என திருமாவளவன் தெரிவித்தது குறித்து...
சென்னை: அமைச்சரவையில் இடம் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement
இதனிடையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காத நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்வதற்காக தேசிய தலைமையுடன் காங்கிரஸ் நிர்வாகிகளின் காணொலி கூட்டம் நடைபெற்றது.
இதன்பின்னர் தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்து தேசிய தலைமை அறிக்கை வெளியிட்டது. அதில், மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.
மேலும், வரும் மக்களவை, மாநிலங்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் முடிவை அடுத்து தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
ஒற்றை காரணத்திற்காக மட்டும் ஒரு முடிவை எடுக்க முடியாது
இந்த நிலையில், அமைச்சரவையில் இடம் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியாது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களுடன் கூறியதாவது:
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரி விசிகவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தான் முடிவு எடுக்க முடியும். நாளை கலந்து ஆலோசித்து முடிவு செய்துள்ளோம். விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக, நல்லாட்சியை தருவார் என்று நம்புகிறேன்.
தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அமைச்சரவையில் இடம் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியாது. இதில் உள்ள நிறை, குறைகளை கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. எங்கள் எதிர்கால அரசியல் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
விஜய் ஆதரவு கேட்டுள்ளார். எங்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களின் கருத்தை அறிந்து முடிவு எடுப்போம். காங்கிரஸ், மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டைத் தாண்டி எங்கள் கட்சியினரின் முடிவை அறிந்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் கூறினார்.
Decisions cannot be made solely on the grounds of having a share in the Cabinet: Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.