தமிழக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதன்! நாளை பதவியேற்பு!
தவெக அமைச்சரவையில் ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதனை அமைச்சர்களாக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது குறித்து..
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை தவெக அமைச்சரவையில் நியமிக்க காங்கிரஸ் தலைமை இன்று (மே 20) ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் அமைச்சர்களாக நாளை (மே 21) பொறுப்பேற்கவுள்ளனர்.
இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''தமிழக அமைச்சரவையில் வழக்குரைஞர் ராஜேஷ் குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சர்களாக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் வழங்கினார். இவர்கள் நாளை அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.
59 ஆண்டுகள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவதால், இது எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.
அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ள இருவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறோம். ராகுல் காந்தியால் வகுக்கப்படவுள்ள துணிச்சலான மக்கள் நலன் மற்றும் மக்கள் சார்ந்த அரசாங்கத்திற்காக பாடுபடுவோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். விஜய் உடன் சேர்த்து தவெக அமைச்சரவையில் தற்போது 10 அமைச்சர்கள் உள்ளனர்.
போக்குவரத்துத் துறை, உயர்க் கல்வித் துறை, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை, வேளாண் துறை, பால்வளத் துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை போன்ற பல்வேறு முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் ஒதுக்கப்படாமல் உள்ளன.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே காங்கிரஸ் சார்பில் இருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற வழக்குரைஞர் ராஜேஷ் குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சர்களாக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் வழங்கினார். இவர்கள் நாளை அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.
மேலும், அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நாளை அறிவிக்கவுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் எனத் தெரிகிறது. அக்கட்சி சார்பில் பாபநாசம் தொகுதியில் வென்ற ஏ.எம். ஷாஜகான் அமைச்சராக நிமியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Congress's Rajesh Kumar and Viswanathan Given Posts in TVK Cabinet taking oath as Ministers tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.