சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் சந்திப்பு!
தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலாளர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசி வருகிறார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை தவெக குழுத் தலைவராக அக் கட்சியின் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட் நிலையில், தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலாளர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2, பாஜக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது தவெகவிடம் 10 இடங்கள் குறைவாக இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
Advertisement
இதனிடையே, வெற்றி பெற்ற தவெக வேட்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த கூட்டத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க எத்தகைய உத்திகளைக் கையாளுவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தவெக குழுத் தலைவராக விஜய் தோ்வு செய்யப்பட்டாா்.
ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம்
சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெக சாா்பில், ஆட்சி அமைக்க உரிமை கோரி கட்சியின் தலைவா் விஜய் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு கடிதம் அனுப்பினாா்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை, தவெக தலைவா் விஜய் புதன்கிழமை சந்திக்க உள்ளதாகவும், அப்போது சட்டப்பேரவை குழுத் தலைவராகத் தான் தோ்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வியாழக்கிழமை(மே 7) ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாகவும், நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். இந்த கூட்டத்தில், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா், உள்துறைச் செயலா் க.மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்ட பல்வேறு உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் சந்திப்பு
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை முன்னாள் அமைச்சரும், தவெக சட்டப்பேரவை உறுப்பினருமான செங்கோட்டையன் சந்தித்து பேசி வருகிறார்.
அப்போது தற்காலிக பேரவைத் தலைவர் தேர்வு குறித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.