தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு... புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும்கூட, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சியமைப்பதில் தவெக மும்முரம் காட்டி வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் இல்லாத நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
Advertisement
Advertisement
இதனிடையே, காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைக்க தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில் பெரும்பான்மை காட்ட வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. இது பினனர் இரு தரப்பிலும் மறுக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் ஒரு தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், ஆதரவு தரக்கூடாது என மற்றொரு தரப்பினர் வலியுறுத்தியாக தகவல்கள் வெளியானது.
ஆனால், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது. அப்படி வெளியான செய்தி முற்றிலும் தவறானது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இந்தநிலையில், திடீர் திருப்பமாக வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி புதுகுப்பத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு புதன்கிழமை இரவு வந்துள்ளனர்.
கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் அதிமுக கொடி பொருந்திய கார்களில் வந்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் தனியார் சொகுசு விடுதிக்கு வந்துள்ளதை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க புதுச்சேரி காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில், ஆய்வாளர் சத்தியநாராயணன் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் தற்போது தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் திடீரென புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பது தமிழகத அரசியலில் பல்வேறு யூகங்களுக்கும் பரபரப்புகளுக்கும் வித்திட்டுள்ளது.
Successive Sensations in Tamil Nadu Politics... AIADMK MLAs at a Private Resort in Puducherry!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.