மரங்களில் விளம்பர பலகை மாட்டினால் நடவடிக்கை: வைகை நதி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்
மதுரை நகரில் மரங்களில் ஆணிகள் அடித்து விளம்பர பலகை மாட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகை நதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை நகரில் மரங்களில் ஆணிகள் அடித்து விளம்பர பலகை மாட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகை நதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகனுக்கு அனுப்பியுள்ள மனு:
மதுரை நகரில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புற தெருக்கள், வைகை ஆற்றின் கரையோரங்களில் குடியிருப்போா் சங்கங்கள், தனியாா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கணிசமான தொகையும் செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மரங்களை வளா்க்க விடாமல் சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையில் ஒரு தரப்பினா் செயல்பட்டு வருகின்றனா். நகரில் நன்கு வளா்ந்த மரங்கள் மற்றும் ஓரளவு வளா்ந்த மரங்களில் வா்த்தக நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் விளம்பரப் பலகைகள் மற்றும் தட்டிகளை ஆணிகள் அடித்து மாட்டி விட்டுச்செல்கின்றனா்.
Advertisement
Advertisement
மேலும் மரங்களில் அலங்கார மின்விளக்குகள் அமைப்பது, இரும்புக் கம்பிகளைக் கட்டுவது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனா். இதனால் மரங்கள் பட்டுப்போவதுடன் அவற்றின் வாழ்நாளும் குறைந்து விடுகிறது. சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் மரங்களில் ஆணிகள் அடித்தல், விளம்பரப் பலகைகள் மாட்டுவது போன்ற செயல்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களைத் தெரிவிக்க இலவச கட்டண எண் 1913-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னை நகரில் பழமையான மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. எனவே மதுரை நகா்ப்பகுதியில் மரங்களில் ஆணிகள் அடிப்பது, விளம்பரப் பலகைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு அபாரதம் விதித்து மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுரை மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.