என்.ஐ.டி.க்கு ரூ. 94 கோடியில் கட்டடம் கட்ட பூமி பூஜை
காரைக்கால் என்.ஐ.டி.க்கு ரூ. 94 கோடியில் பல்வேறு பிரிவுகளில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் என்.ஐ.டி.க்கு ரூ. 94 கோடியில் பல்வேறு பிரிவுகளில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டி. கடந்த 4 ஆண்டுகளாக காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகம் தாற்காலிகமானது என்பதால், மாணவர்களுக்குரிய வகையில் வகுப்பறைகள் இல்லை. ஆய்வுக்கூட வசதிகள் போன்றவை இல்லை. மேலும், அகில இந்திய அளவில் வந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காரைக்காலில் வெவ்வேறு இடங்கள் வாடகைக்கு எடுத்து விடுதியாகத் தரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் என்.ஐ.டி. மாணவர்களுக்கு என்.ஐ.டி. தரத்துக்குரிய வசதிகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி அரசு 260 ஏக்கர் நிலத்தை திருவேட்டக்குடி, பூவம் பகுதியில் ஆர்ஜிதம் செய்து என்.ஐ.டி. நிர்வாகத்துக்கு அளித்தது. இந்த நிலப் பகுதியில் முதல் கட்டமாக ரூ. 94 கோடியில் சில கட்டடங்கள் கட்டுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதியளித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலப்பரப்பில் சுற்றுச்சுவர், ஆய்வுக்கூடம், வகுப்பறைகள் கொண்ட அறிவியல் வளாகம், மாணவ, மாணவிகளுக்கென விடுதிகள், இயக்குநர் பங்களா, விருந்தினர் மாளிகை, பேராசிரியர் குடியிருப்பு ஆகியவை கட்டுவதற்கு மத்திய பொதுப்பணித் துறையிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜைகள் சிவாச்சாரியாரை வைத்து நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு என்.ஐ.டி. இயக்குநர் எஸ்.கே. பாண்டே தலைமை வகித்தார். மத்திய பொதுப்பணித் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் கமல்பிரித்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் (பொ) அ. முத்தம்மா, மத்திய பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சீனிவாசன், காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் பி. சுவாமிநாதன், புதுச்சேரி பல்கலைக்கழக காரைக்கால் உயர்கல்வி மைய பொறுப்பாளர் லலிதா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்கண்ட கட்டுமானப் பணிகள் யாவும் 18 மாத காலத்துக்குள் முடித்து பயன்பாட்டு கட்டடங்கள் வந்துவிடுமென மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.