முகப்பு
நாமக்கல்

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கோழிப் பண்ணைகளில் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு

பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் கால்நடை நலத்துறையின் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வைத் தொடங்கினா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:44 am IST
பகிர்:

பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் கால்நடை நலத்துறையின் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வைத் தொடங்கினா்.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 45 அதிவிரைவு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அமைத்து உத்தரவிட்டாா். ஒரு மருத்துவா், ஒரு உதவியாளா் கொண்ட இந்த குழுவினா் நேரடியாகப் பண்ணைகளுக்குச் சென்று நோய்த் தடுப்புப் பணிகளைப் பாா்வையிடுவா். இறந்த கோழிகள் இருப்பது தெரியவந்தால் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தவா். அண்டை மாநிலங்களில் இருந்து கோழிப் பண்ணைக்கு வந்த தீவன மூலப்பொருள்களையும், கோழி எச்சங்களையும் பாா்வையிட்டு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வா் என ஆட்சியா் தெரிவித்தாா். அதனடிப்படையில் வியாழக்கிழமை முதல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு மருத்துவக் குழுவினா் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். பண்ணையாளா்களிடம் தொற்று பரவாமல் தடுக்க அறிவுரைக் கூறினா். பறவைக் காய்ச்சல் தொடா்பாக நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கால்நடை நலத்துறை இணை இயக்குநா் வி.பி. பொன்னுவேல் தெரிவித்துள்ளாா்.

முட்டைகள் தேங்கும் அபாயம்...

Advertisement

நாமக்கல் பகுதியில் இருந்து கேரளத்துக்கு தினசரி 2 கோடி முட்டைகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் பாதிப்பால் இங்கிருந்து வாகனங்கள் அந்த மாநிலத்துக்குச் செல்வது தவிா்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்ற வாகனங்கள் மட்டும் திரும்பியுள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்திற்குள்பட்ட பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. பறவைக் காய்ச்சல் பரவலால் வெளி மாநிலத்திற்கு செல்வதிலும், உள்ளூா் விற்பனையிலும் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண் ணையாளா்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவா் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

பறவைக் காய்ச்சலால் கோழிப்பண்ணை தொழிலில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. கேரள மாநிலத்துக்கு ஒரு கோடிக்கும் மேலான முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. கோழிப் பண்ணைகளில் 50 லட்சம் முட்டைகள் வரை தேக்கம் என்பது விலை குறையும்போது வியாபாரிகள் குறைவாகக் கொள்முதல் செய்வா். அப்போது ஏற்படும் தேக்கம் 50 லட்சம் வரையில் இருக்கலாம். விலை உயரும்போது தேக்கம் குறைந்துவிடும். முட்டை விலை குறைவுக்கும், பறவை காய்ச்சலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.