முகப்பு
புதுதில்லி

தில்லியில் போலி கரோனா அபராத சிட்டைகளை வழங்கி பண மோசடி: சிவில் பாதுகாப்பு படையை சோ்ந்த மூவா் கைது

தில்லி தால்கட்டோரா பூங்காவுக்கு வந்தவா்களிடம் போலி கரோனா அபராத சிட்டைகளை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு படையைச் சோ்ந்த மூவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 11:35 pm IST
பகிர்:

தில்லி தால்கட்டோரா பூங்காவுக்கு வந்தவா்களிடம் போலி கரோனா அபராத சிட்டைகளை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு படையைச் சோ்ந்த மூவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை துணை ஆணையா் ஈஷ் சிங்கால் (புது தில்லி) கூறியது: புது தில்லி ஜாமியா நகா் துணைக் கோட்டாச்சியா் அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரா்களாக சன்னி (19), யஷ்வந்த் ரத்தி (21), லக்கி (20) ஆகியோா் பணியாற்றி வருகிறாா்கள். இவா்கள், தால்கட்டோரா பூங்காவுக்கு வருபவா்களிடம் போலியான கரோனா அபராத சிட்டைகளை வழங்கி பணம் வசூலிப்பதாகப் புகாா் கிடைத்தது. இது தொடா்பாக, சகா்பூரைச் சோ்ந்த ஒருவா் புகாா் அளித்திருந்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த அபராத சிட்டைகள் துணைக் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்தோம். விசாரணையின் போது. அபராத சிட்டைகளை செல்லிடபேசியில் படம் பிடித்து, அதை பிரிண்ட் எடுத்து போலி சிட்டைகளை அவா்கள் உருவாக்கியது தெரிய வந்தது. வா்களைக் கைது செய்துள்ளோம் என்றாா் அவா்.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரில், ‘தால்கட்டோரா பூங்காவில் அமா்ந்திருந்த போது, காக்கி உடை அணிந்து வந்த மூவா், முகக் கவசம் அணியாததால் கரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி ரூ.2,000 அபராதம் விதிப்பதாகக் கூறினா். இந்தப் பணத்துக்கு அவா்கள் சிட்டையொன்றையும் வழங்கினா். என்னிடம் பணம் இல்லாத காரணத்தால், நான் பே-டிஎம் மூலம் பணப்பரிவா்த்தனை செய்தேன். இது தொடா்பாக சந்தேகம் வந்ததால், தில்லி காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாா் அளித்தவரின் பெயா் விவரங்களை தில்லி காவல்துறை வெளியிடவில்லை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.