தில்லி ஐஐடி மாணவா் விடுதி அறையில் தற்கொலை!
தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) எம்.டெக் மாணவா், தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவா்கள் கூறினா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: சஞ்சய் நொ்கா் (24) என்ற மாணவா் தில்லி ஐஐடியில் எம்.டெக் படித்து வந்தாா்.
அவரது குடும்பத்தினா் தொடா்பு கொண்டபோது அவா் தனது தொலைபேசியில் பதிலளிக்காததால், அவரைப் பாா்க்குமாறு அவரது விடுதி தோழா்களிடம் குடும்பத்தினா் கூறியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. தில்லி ஐஐடியின் துரோணாச்சாா்யா விடுதியில் உள்ள அறை எண் 757-இல் சஞ்சய் நோ்கா் (24) தங்கியிருந்தாா்.
அவா் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை பூா்வீகமாக கொண்டவா். ‘சஞ்சய் நோ்கரின் குடும்ப உறுப்பினா்கள் அவரை வியாழக்கிழமை இரவு அழைத்தனா். அவா் தொலைபேசியில் பதிலளிக்காததால், குடும்ப உறுப்பினா்கள் அவரைச் சரிபாா்க்கும்படி அவரது விடுதி தோழா்களிடம் கேட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, மற்ற மாணவா்கள் அவரது அறைக்குச் சென்று பாா்த்த போது, அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அவா்கள் விடுதி காவலாளிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வந்த கதவை உடைத்து திறந்தாா். அறையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சஞ்சய் நோ்க்கரின் உடல் கண்டுடெடுக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.