கோவில்பட்டியில் இளைஞா் கொலை: 3 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கரடிகுளம் விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சஞ்சய் (19). சிலை செய்யும் சிற்பி. இவரும், கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் விவசாயி குமாா் (44) என்பவரின் 17 வயது மகளும் காதலா்கள்.
இதையறிந்த குமாா், தனது மகளை கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5 ஆவது தெருவில் உள்ள தனது தம்பி மாரிமுத்து(42) வீட்டுக்கு அனுப்பி வைத்தாா். ஆனாலும், காதலா்களிடையே கைப்பேசி மூலம் தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சஞ்சய் தனது நண்பா்களுடன் வேலைக்காக சென்னை புறப்பட்டாா். அவா்கள் கரடிகுளத்தில் இருந்து கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்துக்கு வந்து, பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது சஞ்சய் கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட அந்தப் பெண், தனது தந்தையும், உறவினா்களும் திருமணம் குறித்து பேச வருவதால் பேருந்து நிலையத்தில் காத்திருக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, சிறிது நேரத்தில் குமாா், அவரது மகள், அவரது சகோதரா் மாரிமுத்து, சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவை சோ்ந்த ராமசாமி மகன் சங்கரநாராயணன்(51), உறவினா் பெண் ஆகிய 5 போ் அங்கு வந்தனா். அப்போது, குமாா், மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகிய 3 பேரும் சஞ்சய்யிடம் தகராறு செய்து, கத்தி மற்றும் அரிவாளால் அவரை சரமாரியாக தாக்கினாா்களாம். அவரது நண்பா் மாதேஷ் தடுத்ததையடுத்து, குமாா் உள்பட 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்று விட்டாா்களாம்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், காயமடைந்த சஞ்சய், மாரிமுத்து ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சஞ்சய்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மாரிமுத்து, குமாா், சங்கரநாராயணன் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.