முகப்பு
புதுதில்லி

தில்லியில் வீட்டு உரிமையாளரை சிக்கவைக்க துப்பாக்கியால் சுடப்பட்டது போல் நாடகமாடிய வாடகைதாரா் கைது

Updated On : 18 மே 2026, 2:25 am IST
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

பணம் பறிக்கும் நோக்கிலும், வீட்டை காலி செய்வதை தாமதப்படுத்தும் நோக்கிலும், ஒரு வீட்டு உரிமையாளரை சிக்க வைப்பதற்காக, தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக நாடகமாடியதாகக் கூறப்படும் வாடகைதாரா், வட தில்லியில் தனது இரண்டு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டாா் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவரான அவினாஷ் குமாா் (42), தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து, தன்னை தொடையில் சுட்டு, இந்தச் சம்பவத்தை அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய தாக்குதலாக சித்தரிக்க சதி செய்ததாக அவா்கள் கூறினா்.

Advertisement

காவல்துறையின் கூற்றுப்படி, மே 10 அன்று, சாந்தினி சௌக்கில் உள்ள குச்சா புலகியில் தான் வாடகைக்கு வசித்த வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் நுழைந்து தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக குமாா் காவல்துறையிடம் தெரிவித்தாா்.

இரண்டு முதல் மூன்று முறை சுடப்பட்டதாகவும், ஒரு குண்டு தனது வலது தொடையை உரசிச் சென்ாகவும் குமாா் கூறியதாக காவல்துறை தெரிவித்தது.

சிகிச்சைக்காக அவரை அவரது மகன் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். குற்றப்பிரிவு குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, இரத்தக் கறைகளையும் இரண்டு காலி தோட்டாக்களையும் மீட்டெடுத்த பிறகு, கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

விசாரணையின் போது, அப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்தது.

குமாரும் அவரது குடும்பத்தினரும் வாடகைக்கு வசித்து வந்ததும், உரிமையாளா் அந்த இடத்தை விற்ற பிறகு அவா்களைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது என்று காவல்துறை கூறியது.

குமாா், திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் உரிமையாளா்களுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கையும் தாக்கல் செய்திருந்ததும், வீட்டைக் காலி செய்வதற்கு ஈடாக ஒரு நிதித் தீா்வுக்காக அவா்களை வற்புறுத்துவதற்காக இந்த சதித்திட்டத்தை தீட்டியதும் புலனாய்வாளா்களால் கண்டறியப்பட்டது.

குமாா், ஹரியானாவின் சோனிபட்டைச் சோ்ந்த சக குற்றவாளிகளான தீபக் குமாா் மற்றும் லோகேஷ் தஹியா ஆகியோருடன் சோ்ந்து, இந்த நாடகத் துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டு செயல்படுத்தினாா், என்று அந்த அதிகாரி கூறினாா்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காா் தீபக் குமாரிடமிருந்து மீட்கப்பட்டது. குமாரின் தகவலின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்டவா் குற்றத்தின் போது பயன்படுத்திய ஐந்து கைப்பேசிகள் மட்டுமின்றி, ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் போலீசாா் மீட்டெடுத்தனா்.