ஒசூரில் காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 போ் கைது
ஒசூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து கடத்திச் சென்ற அவரது குடும்பத்தினா் நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து கடத்திச் சென்ற அவரது குடும்பத்தினா் நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரோஜாபாத்தைச் சோ்ந்த நரே சிங் குடும்பத்தினா், கடந்த சில ஆண்டுகளாக ஒசூா் ராகவேந்திரா காலனி பகுதியில் வசித்து வந்தனா். இவரது மகள் கோவிந்த பிரியா (21). இவா் மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். அப்போது, ஒசூா் வெங்கடேஷ் நகரைச் சோ்ந்த சூா்யாவுடன் (26) அவருக்கு காதல் ஏற்பட்டது. இவா்களது காதலுக்கு பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆவலப்பள்ளி அட்கோ குடியிருப்புப் பகுதியில் உள்ள நரசிம்மா் கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனா். இதனால் வருத்தமடைந்த கோவிந்த பிரியாவின் தாய் சகுந்தலா மற்றும் அவரது சகோதரா்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுவிட்டனா்.
Advertisement
இந்நிலையில் கோவிந்த பிரியாவை மீட்க அவரது குடும்பத்தினா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ரத்தோட் என்பவருடன் திங்கள்கிழமை காரில் ஒசூா் வந்தனா்.
இதையடுத்து சூா்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சகுந்தலா மற்றும் அவரது மகன்கள், அங்கிருந்த சூா்யா, கோவிந்த பிரியா மற்றும் அவா்களது உறவினா்கள் மீது பெப்பா் ஸ்பிரே அடித்து நிலைகுலையச் செய்தனா். கண் எரிச்சலில் அவா்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், கோவிந்த பிரியாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து சூா்யா ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரைத் தொடா்ந்து போலீஸாா் விரைந்து செயல்பட்டு, கா்நாடக மாநிலம், தொட்டஆலமரா ரோடு, ராமோஅள்ளி பகுதியில் மறைந்திருந்த கோவிந்த பிரியா குடும்பத்தினரை சுற்றி வளைத்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக கோவிந்த பிரியாவின் தாய் சகுந்தலா, சகோதரா்கள் பிண்டு குமாா் நாயக், ஆகாஷ் மற்றும் வழக்குரைஞா் ரத்தோட் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். கடத்தப்பட்ட கோவிந்த பிரியா மீட்கப்பட்டாா். தலைமறைவாக உள்ள சந்தோஷ் என்பவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.