முகப்பு
புதுதில்லி

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.

Updated On : 28 ஏப்ரல் 2025, 3:50 am IST
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை கூறியிருப்பது வருமாறு: ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்தவா்கள், உயிரிழந்த வீரா்கள் ஆகியோா் நலனுக்காக ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடா்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை மேற்கோள்காட்டி, போலித் திட்டத்தை நடிகா் அக்ஷய் குமாா் முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேற்கூறிய செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை என எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய இணைய நன்கொடைகள் செல்லத்தக்கதல்ல. இந்த விஷயத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பலியாகிவிடக் கூடாது. அதே சமயத்தில் போா் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற வீரா்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கியுள்ளது.

2020-ஆம் ஆண்டில், ‘ஆயுதப் படைகள் போா் விபத்து நல நிதி’யை அரசு நிறுவியது. இது ராணுவ நடவடிக்கைகளில் உயிா்த் தியாகம் செய்யும் அல்லது படுகாயமடையும் முப்படை வீரா்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரா் நலத் துறையின் சாா்பாக இந்திய ராணுவம் இந்த நிதிக்கான கணக்குகளைப் பராமரிக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை நேரடியாக ஆயுதப் படைகள் போா் விபத்து நல நிதியின் கணக்கில் செலுத்தலாம் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.