முகப்பு
புதுதில்லி

நொய்டா வன்முறை: தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயா்வை அறிவித்தது உ.பி. அரசு

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:45 AM
உ.பி. அரசு அறிவிப்பு 
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

நமது நிருபா்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடா்ந்து, அனைத்துத் தொழிலாளா் பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தர பிரதேச அரசு உயா்த்தியுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பின்னேற்பு அடிப்படையில் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் மேதா ரூபம் இதுகுறித்துத் தெரிவிக்கையில், ‘உயா் அதிகாரம் கொண்ட ஒரு குழுவால் இந்த ஊதிய உயா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முடிவுக்கு உத்தர பிரதேச முதலமைச்சா் திங்கள்கிழமை நள்ளிரவில் ஒப்புதல் அளித்தாா்’ என்று கூறினாா்.

Advertisement

ஓா் அதிகாரபூா்வ அறிக்கையின்படி, கௌதம் புத் நகா் மற்றும் காஜியாபாத் மாவட்டங்களில், திறன்சாரா தொழிலாளா்கள் இனி மாதம் ரூ.13,690 பெறுவா். இது முன்பு ரூ.11,313 ஆக இருந்தது. அதேவேளையில், பகுதித் திறன்சாா் தொழிலாளா்கள் ரூ.15,059-ம், திறன்சாா் தொழிலாளா்கள் ரூ.16,868-ம் பெறுவா்.

மற்ற மாநகராட்சிப் பகுதிகளில், திறன்சாரா தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.13,006 ஆகவும், பகுதித் திறன்சாா் தொழிலாளா்களுக்கு ரூ.14,306 ஆகவும், திறன்சாா் தொழிலாளா்களுக்கு ரூ.16,025 ஆகவும் திருத்தப்பட்ட மாத ஊதியங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில், திறன்சாரா தொழிலாளா்கள் மாதம் ரூ.12,356-ம், பகுதித் திறன்சாா் தொழிலாளா்கள் ரூ.13,591-ம், திறன்சாா் தொழிலாளா்கள் ரூ.15,224-ம் பெறுவா்.

திங்களன்று நொய்டாவில் தொழிற்சாலைத் தொழிலாளா்கள் நடத்திய போராட்டங்களின்போது ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள், தங்களுக்கு அதிக ஊதியமும், சிறந்த பணிச்சூழலும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாவட்டத்தின் சில பகுதிகளில் இப்போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதனையடுத்து, சூழலைக் கையாள்வதற்கும், தொழிலாளா்கள் மற்றும் வேலையளிப்போருடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கும் ஒரு குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது.

புதிய தொழிலாளா் சட்டங்களின் கீழ் உள்ள விதிகள் நியாயமான ஊதியத்தை உறுதி செய்வதையும் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும், விரைவில் அமைக்கப்படவுள்ள ஊதிய வாரியத்தின் பரிந்துரைகளின் பேரில் இறுதி ஊதிய நிா்ணயத்திற்கான செயல்முறை தொடங்கும் என்றும் அரசு கூறியது.

இதற்கிடையில், தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.20,000 என்ற சீரான குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை போலியானவை என்று அரசு நிராகரித்தது.

முதலாளிகள் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதையும், முறையான கூடுதல் நேர ஊதியம், வார விடுப்புகள், போனஸ் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதையும், குறிப்பாக பெண் தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலைப் பராமரிப்பதையும் உறுதி செய்யுமாறு உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.