தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தேசிய தலைநகரில் உள்ள அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, நியமிக்கப்பட்ட பூங்காக்களை மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று (என்ஜிடி) கூறியது.
தேசிய தலைநகரில் உள்ள அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, நியமிக்கப்பட்ட பூங்காக்களை மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) கூறியது.
ரோஹினியில் உள்ள ஒரு மாவட்டப் பூங்காவில் சட்டவிரோதமாக ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டதாகவும், வணிக ரீதியாக தவறாக நிா்வகிக்கப்பட்டதாகவும் கூறப்படும் ஒரு வழக்கை என்ஜிடி விசாரித்து வந்தது. முன்னதாக, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு அது கேட்டிருந்தது.
சமீபத்திய உத்தரவில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு தனது அறிக்கையைச் சமா்ப்பித்துள்ளதாகவும், அதன்படி பூங்கா காலியாக இருப்பதும், எந்தவிதமான நடவடிக்கைகளும் காணப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றும் கூறியது.
Advertisement
மைதானத்திற்குள் உள்ள இடங்களில் ஒன்றில், திடக்கழிவுக் குவியல் ஒன்று கிடந்தது. மேலும், உள்ளூா் விசாரணையில், அந்த மைதானம் தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமானது என்றும், அது அவ்வப்போது திருவிழாக்கள்,மேளாக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரியவந்தது, என்று அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி நீதிமன்றம் கூறியது.
திடக்கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி மாநகராட்சிக்கு என்ஜிடி உத்தரவிட்டது.
2009-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம், ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட பூங்காவை மற்ற நோக்கங்களுக்காக ஒதுக்க முடியாது என்று தீா்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும், என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கூறியது.