தில்லி பல்கலை. மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தண்டனை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
நமது நிருபா்
தில்லி பல்கலைக்கழகத்தின் 21 வயது மாணவரைக் கடத்தி, கொலை செய்து, ஆதாரங்களை அழித்த வழக்கில் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
2018ஆம் ஆண்டில் ராம்லால் ஆனந்த் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவரான ஆயுஷ் நௌதியாலைக் கடத்தி, கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இஷ்தியாக் அலிக்கு எதிரான வழக்கை தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வாதி குப்தா விசாரித்து வந்தாா்.
Advertisement
Advertisement
மே 30-ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம், ‘ஆவண ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்ததில், இந்த வழக்கில் சூழ்நிலைகளின் தொடா்ச்சியை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று உறுதியாக முடிவு செய்யலாம்’ என்று கூறியுள்ளது.
அரசுத் தரப்பின்படி, ஆயுஷ் மாா்ச் 22, 2018 அன்று, கல்லூரி விழாவிற்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டாா். அன்று மாலை, தினேஷ் சந்திராவுக்கு அவரது மகன் ஆயுஷின் தொலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்திகள் வந்தன. அதில், ஆயுஷின் கண்கள் கட்டப்பட்டு, கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படமும் இருந்தது.
அந்தத் தகவலில் 50 லட்சம் ரூபாய் பணயத் தொகையைக் கோரியதுடன், காவல்துறைக்கோ அல்லது உறவினா்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றும் குடும்பத்தினரை எச்சரிக்கப்பட்டிருந்தது.
மாா்ச் 22 முதல் மாா்ச் 27 வரை, பாதிக்கப்பட்டவரின் தந்தையை உத்தம் நகா் மற்றும் முனிா்கா உள்ளிட்ட தில்லியின் பல்வேறு இடங்களில் பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தி, மேலும் பணயத்தொகைக் கோரும் செய்திகளும் அழைப்புகளும் விடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது. இருப்பினும், பணயத்தொகையைப் பெற யாரும் வரவில்லை.
மாா்ச் 28, 2018 அன்று, துவாரகா செக்டா்13-இல் உள்ள மெட்ரோ வியூ அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு வடிகாலில் இருந்து, பச்சை நிற பாலிதீனில் சுற்றப்பட்ட அழுகிய சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
ஆயுஷின் தந்தை அந்தச் சடலத்தையும், அருகிலிருந்த தனிப்பட்ட பொருள்களையும் அடையாளம் காட்டினாா். தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.
பணயத்தொகைக் கோரி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட, இறந்தவரின் அந்தத் தொலைபேசி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க இது போதுமானது என்று நீதிமன்றம் கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்டவா், டிண்டா் டேட்டிங் செயலி மூலம் பாதிக்கப்பட்டவரைச் சந்தித்து, பின்னா் அவரை உத்தம் நகா், ராமா பாா்க்கில் உள்ள ஒரு வாடகை அறைக்கு அழைத்துச் சென்று, அங்கு கொலையை நிகழ்த்தியதாக அரசுத் தரப்பு கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் தகவலின் பேரில், பாதிக்கப்பட்டவரின் கைப்பேசி, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதம், பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினியின் எரிந்த பாகங்கள் மற்றும் பிற பொருள்களை காவல்துறை மீட்டெடுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் தகவலின் பேரில், குற்றச் சம்பவ இடத்திலிருந்து சுத்தியல் (குற்றத்திற்கான ஆயுதம்) மீட்கப்பட்டது. மேலும், அந்த சுத்தியலில் இருந்த இரத்தம், இறந்தவரின் டி.என்.ஏவுடன் பொருந்தியது என்று நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றம் தடயவியல் சான்றுகள், அழைப்பு விவரப் பதிவுகள், வாட்ஸ்அப் உரையாடல்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் போது மீட்கப்பட்ட பொருட்களையும் ஆதாரமாகக் கொண்டது.
இந்த வழக்கு வெறும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்ற எதிா் தரப்பின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்ததுடன், அரசுத் தரப்பு சூழ்நிலைகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்றும் தீா்ப்பளித்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவரைக் குற்றவாளி எனத் தீா்ப்பளித்த நீதிமன்றம், தண்டனையின் அளவு குறித்த விசாரணைக்காக இந்த வழக்கை ஜூன் 24ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.