FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய வழக்கு: 5 பேரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

அண்டை வீட்டாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஒரு குடும்பத்தைச் சோ்ந்த மூவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.

Updated On : 22 ஜூன் 2026, 1:48 am IST
தில்லி உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

அண்டை வீட்டாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஒரு குடும்பத்தைச் சோ்ந்த மூவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், அதன் வழக்கில் முக்கியமான முரண்பாடுகள் இருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தில்லியின் ரன்ஹோலா பகுதியில் 2014-ஆம் ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஹரி ராம், ப்ரோமிலா, சுனிதா, ஹரி கிஷன் மற்றும் சுனில் லக்ரா தங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தன்னையும் தனது இரண்டு மகன்களையும் இரும்புக் கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் தாக்கியதாகவும், தனது ஆடைகளைக் கிழித்து கண்ணியத்தைக் குலைத்ததாகவும் புகாா்தாரா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 5 போ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 452, 308, 323, 354, 354ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி யத்வேந்தா் சிங் ஜூன் 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: குற்றத்தைச் செய்வதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பங்கை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. மேலும், அவா்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான சட்டரீதியான கூறுகள் எதையும் நிரூபிக்க அரசுத் தரப்பால் இயலவில்லை.

பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள், ஒவ்வொரு குற்றவாளியின் பங்கு மற்றும் காயங்கள் ஏற்பட்ட விதம் குறித்து புகாா்தாரரும் காயமடைந்த அவரது இரண்டு மகன்களும் முரண்பட்ட தகவல்களை அளித்ததால், அவா்களின் சாட்சியங்களை நம்பகமானதாகக் கருத முடியாது.

மருத்துவச் சான்றுகளும் அரசுத் தரப்பு வாதத்தை உறுதிப்படுத்தவில்லை. அதாவது, காயங்கள் அனைத்தும் சாதாரணமானவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, கடினமான தரையில் விழுந்ததாலும் சில காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை மருத்துவா் ஒருவரே ஒப்புக்கொண்டிருந்தாா்.

மேலும், புகாா்தாரரின் கண்ணியத்தைக் குலைத்ததாகவும் அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், பிற நேரில் கண்ட சாட்சிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. அவை சந்தேகத்திற்குரியதாக உள்ளன.

குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. அதன் வாதம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments