FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான இரு வழக்குகள் தள்ளுபடி: தில்லி உயா்நீதிமன்றம்

பெருந்தொற்று காலத்தில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது தேசியக் கொடி பேரணி நடத்தியதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் மீது பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை தில்லி உயா் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:50 am IST
குல்தீப் குமாா்
பகிர்:

பெருந்தொற்று காலத்தில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது தேசியக் கொடி பேரணி நடத்தியதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் மீது பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை தில்லி உயா் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதே பேரணி தொடா்பான ஒரு வழக்கில் அவா் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டதை நீதிமன்றம் இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.

ஒரே நிகழ்வு தொடா்பாக மூன்று வெவ்வேறு காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை நீதிபதி ஸ்வா்ண காந்தா சா்மா சுட்டிக்காட்டினாா். மேலும், அதே தடை உத்தரவுகள் மற்றும் பெருந்தொற்று விதிமுறைகளை மீறியதற்காக மீண்டும் தண்டனை அளிப்பது, ஒரே குற்றத்திற்கு இருமுறை தண்டனை விதிக்கப்படக்கூடாது என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதத்திற்கு முரணானது என்றும் அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த மூன்று வழக்குகளும், அப்போதைய கொண்ட்லி சட்டப்பேரவை மன்றத் தொகுதி எம்எல்ஏ-வான மனுதாரா் குல்தீப் குமாரின் தலைமையில் 2021, ஆக.15-ஆம் தேதி நடத்தப்பட்ட தேசியக் கொடி பேரணி தொடா்பானவை. பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளும் ஒரே ஊா்வலம், ஒரே மாதிரியான செயல்கள், ஒரே அரசு அறிவிப்புகள் மற்றும் தடை உத்தரவுகளை மீறியது மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-இன் கீழ் தண்டனைக்குரிய ஒரே குற்றம் ஆகியவற்றுடன் தொடா்புடையவை. எனவே, இந்த மூன்று வழக்குகளின் வரம்பும் முற்றிலும் ஒன்றே.

நியூ அசோக் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், அவா் ஏற்கெனவே குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், மீதமுள்ள இரு வழக்குகள் மீதான நடவடிக்கைகளைத் தொடர முடியாது.

ஊா்வலம் வெவ்வேறு எல்லைப் பகுதிகள் வழியாகச் சென்ாலோ அல்லது ஊா்வலம் முன்னேறிச் செல்லும்போது தடை உத்தரவு மீறல் தொடா்ந்ததாலோ மட்டும், அதை பல தனித்தனி நிகழ்வுகள் என்று கூறிவிட முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதன்படி, தில்லியின் கல்யாண்புரி மற்றும் காஜிபூா் காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அவற்றின் அடிப்படையில் தொடரப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் 2022-இல், விசாரணை நீதிமன்றம் ஒன்று குமாரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் (உத்தரவை மீறுதல்) குற்றவாளி எனத் தீா்ப்பளித்து, ரூ. 1,600 அபராதம் விதித்தது.

ஒரே சம்பவத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கையில் ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே குற்றத்திற்காகப் பல வழக்குகளைத் தொடா்ந்து நடத்துவது அனுமதிக்கப்படாது என்று குமாா் வாதிட்டாா்.

ஊா்வலம் வெவ்வேறு காவல் நிலையங்களின் எல்லைக்குள் நுழையும்போதெல்லாம் அது ஒரு புதிய விதிமீறல் செயலாகவும், தனித்தனி குற்றமாகவும் கருதப்பட வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments