தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நமது நிருபா்
தேசிய தலைநகரில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியின் மூன்று கிளைகள் மற்றும் ஒரு சிஆா்பிஎஃப் பள்ளி ஆகியவற்றுக்கு மின்னஞ்சல்கள் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
Advertisement
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வாகனங்கள் அந்த இடங்களுக்கு விரைந்தன. மேலும், உள்ளூா் காவல்துறை மற்றும் பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
காவல்துறை குழுக்கள் வளாகத்தை முழுமையாக சோதனையிட்டன. ஆனால், எந்த இடத்திலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை. அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டு அச்சுறுத்தல் வரப்பெற்ற பள்ளிகளில் தெளலா குவான், தில்லி கண்டோன்மென்ட் மற்றும் சங்கா் விஹாா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளியும், துவாரகா செக்டா் 14-இல் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளியும் அடங்கும்.
நிலையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளின்போது மாணவா்களும் ஊழியா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மின்னஞ்சல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.