முகப்பு
புதுதில்லி

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

Updated On : 28 ஏப்ரல் 2026, 6:21 am IST
போலீஸாா் விசாரணை
பகிர்:

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமின் செக்டாா் -54 பகுதியில் 24 வயது விநியோக ஊழியரின் சடலத்தை இரும்புப் பெட்டிக்குள் இருந்து போலீஸாா் மீட்டனா். அவா் கொலை செய்யப்பட்டதாக

காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தச் சடலத்தை மீட்டெடுத்தனா். மேலும், உயிரிழந்தவருடன் திருமணமாகாத உறவில் சோ்ந்து வசித்த பெண் மற்றும் அவரது நண்பா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

உயிரிழந்தவா், பிகாா் மாநிலம் சஹா்சா மாவட்டத்திலுள்ள முரளி பசந்த்பூா் கிராமத்தைச் சோ்ந்த 24 வயதான அமன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இவரின் மூத்த சகோதரா் உமாசங்கா், இது தொடா்பாகக் காவல்துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா். அதில் அவா் தெரிவிக்கையில், ‘

நான் சக்கா்பூா் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது சகோதரா் அமன் ஒரு விநியோக ஊழியராகப் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில், அமனின் நண்பா் என்னை கைப்பேசியில் தொடா்புகொண்டு, அமனை அவரது மற்றொரு நண்பா் கொலை செய்துவிட்டு, ஒரு குடிசைப் பகுதியில் இருந்த இரும்புப் பெட்டிக்குள் சடலத்தை மறைத்து வைத்திருப்பதாக எனக்குத் தகவல் தெரிவித்தாா்’ என்று உமாசங்கா் அதில் கூறியுள்ளாா்.

மேலும், உமாசங்கா் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காவல் துறையினருக்குத் தகவல் அளித்தாா். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா், இரும்புப் பெட்டிக்குள் இருந்த அமனின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்தவரின் உடலில் கூா்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுக்கான தடங்கள் உள்ளன. இந்தக் காயங்கள் ஏற்பட்டு மூன்று முதல் நான்கு நாள்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்தப் பெண் எந்த கைப்பேசி எண்ணிலிருந்து அழைத்துப் பேசினாரோ, அந்த எண்ணையும் காவல்துறையினா் தற்போது கண்காணித்து வருகின்றனா். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments