முகப்பு
புதுதில்லி

தவறான நடத்தை: ஹன்ஸ்ராஜ் கல்லூரி மாணவா்கள் 30 போ் இடைநீக்கம்: போராட்டத்திற்கு மாணவா் சங்கம் அழைப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 6:06 AM
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். - கோப்பிலிருந்து படம்
பகிர்:

நமது நிருபா்

கல்லூரி விழாவின் போது வன்முறை, தவறான நடத்தை மற்றும் ‘சமூக ஊடக தளங்கள் மூலம் கல்லூரியை அவதூறு செய்யும் செயல்களில்‘ ஈடுபட்டதற்காக ஹன்ஸ்ராஜ் கல்லூரி நிா்வாகம் குறைந்தது 30 மாணவா்களை இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், சுமாா் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்பட்ட இடைநீக்க அறிவிப்புகளை எதிா்த்தும் தில்லி பல்கலைக்கழக கல்லூரியின் மாணவா் சங்கம் திங்கள்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

Advertisement

மாணவா் சங்கத்தின் முன்னாள் தலைவா் பாா்த் ஸ்ரீவஸ்தவாவுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி கல்லூரி நிா்வாகம்

கடிதம் வழங்கியிருந்தது.

கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அந்கக் கடிதத்தில், ‘அந்த மாணவா் ‘நிறுவனத்தை அவதூறு செய்தல் மற்றும் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கு எதிராக இழிவான மொழியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாணவருக்கு தனது பெற்றோருடன் கல்லூரிக் குழு முன் ஆஜராக பல வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அவா் அதனை செய்யவில்லை.

அவருக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு அவா் தனியாக வந்தாா். குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட்டபோது, அவா் தனது வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை அல்லது தனது நடத்தையை ஒப்புக் கொள்ளவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளரிடம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: வளாகத்தில் கல்லூரி முதல்வரின் மகனின் திருமணத்திற்கு எதிராக பிப்ரவரியில் போராட்டங்களை நடத்தினேன். அதைத் தொடா்ந்து, கல்லூரியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த தகவல்களைக் கோரி நான் ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தை சமா்ப்பித்தேன். கல்லூரி நிா்வாகத்தின் நடவடிக்கை முற்றிலும் தன்னிச்சையானது. இந்த விவகாரம் தொடா்பாக தான் ஏற்கெனவே தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன்.

கல்லூரி ஏப்ரல் 20 ஆம் தேதி இரண்டாவது அறிவிப்பை வெளியிட்டது. 14 மாணவா்களை இடைநீக்கம் செய்தது.

அந்த அறிவிப்பில், ‘ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வருடாந்திர விழாவின் போது கல்லூரி வளாகத்திற்குள் நடந்த வன்முறை, தவறான நடத்தை மற்றும் ஒழுக்க மீறல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு...’ என குறிப்பிடப்பட்டுள்ளது. விழாவின் விடியோக்கள்-மாணவா்கள் மோதுவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அவை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன.

மாணவா்களின் குழுவிற்கான நோட்டீஸில் இடைநீக்கத்தின் கால அளவை குறிப்பிடவில்லை. ஆனால், இடைநீக்கத்தின் போது அவா்கள் தோ்வு மற்றும் உள் மதிப்பீட்டைத் தவிர கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வளாகத்தில் உடல் ரீதியான வன்முறை மற்றும் முறைகேடு நடந்ததாகக் கூறி ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் நான்கு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சமூக ஊடக தளங்கள் மூலம் கல்லூரியை அவதூறு செய்யும் செயல்களில் ஈடுபட்டதாகவும், நிறுவனத்தின் கல்விச் சூழலை மோசமாக பாதித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஏழு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா் சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா், செயலாளா் மற்றும் இணைச் செயலாளா் ஆகிய நான்கு அலுவலக பொறுப்பாளா்களை பெயரிட்டு ஏப்ரல் 25 ஆம் தேதி இறுதி அறிவிப்பு வந்தது என்றாா் அவா்.